Saturday, October 11, 2014

ஹாங்காங் போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவின் கை மறைந்துள்ளது: சீனா குற்றச்சாட்டு!

Saturday, October 11, 2014
உலகின் நிதி மையம் என்ற சிறப்பு பெயரைப் பெற்றுள்ள ஹாங்காங், பிரிட்டனின் ஆளுகையின் கீழ் இருந்து வந்தது. கடந்த 1997–ம் ஆண்டு, ஜூலை மாதம் 1–ந் தேதி, சீனாவின்வசம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்டது. அது முதல், ஹாங்காங், சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

‘ஒரு நாடு இரு ஆட்சி முறை’ என்ற அடிப்படையில் ஹாங்காங் செயல்பட்டு வருவதாக கூறப்பட்டாலும், சீனா தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்தான் அந்த நகரை வைத்துள்ளது. தற்போது ஹாங்காங்கின் ஆட்சியாளராக தலைமை நிர்வாகி என்ற பெயரில் லீயுங் சன் யிங் செயல்பட்டு வருகிறார்.

ஹாங்காங்கில், அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு 2017–ம் ஆண்டு தேர்தல் நடத்தப்படும் என சீனா அறிவித்துள்ளது. ஆனாலும் ஹாங்காங் மக்கள் தங்கள் விருப்பத்தின்படி அந்தத் தலைவரை தேர்ந்தெடுக்க முடியாது.

சீன அரசு அமைக்கிற குழுதான் வேட்பாளர்களை தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தங்கள் தலைவரை தாங்களே ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுத்துக்கொள்ள சுதந்திரமான வாக்குரிமை வேண்டும் என கேட்டு மாணவர்களும், பொதுமக்களும் கடந்த 15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்களை ஒடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் எடுத்து வருகின்றனர் இருந்தாலும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை.

இந்த நிலையில் ஹாங்காங் அரசுக்கும்  போராட்டக்காரர்களுக்கும் இடையே  வெள்ளிகிழமை முறையான பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கபட்டது. மோங்காக் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் கேரி லாமுடன் நடக்க  நடக்க இருந்த பேச்சுவார்த்தையை ஆர்ப்பாட்டகாரர்களின் ஒருங்கிணைப்பாளர்கள் ரத்து செய்தனர்.

இந்நிலையில், ஹாங்காங் போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்காவின் கை மறைந்துள்ளதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத், மற்றும் க்சிங்ஜியாங் மாகாணத்தில் கலவரத்தையும், போராட்டத்தையும் தூண்டிவிட்ட அமெரிக்க அதிகாரி ஒருவர்தான் ஹாங்காங் போராட்டத்திற்கு தூண்டுகோலாக இருப்பதாகவும் சீனா குற்றம்சாட்டியுள்ளது.

போராட்டக்காரர்களுடன் அமெரிக்காவின் ஜனநாயக நிதியத்துக்கான துறையின் இயக்குனர் ஒருவர் அடிக்கடி சந்தித்து பேசியதை இந்த போராட்டத்துடன் இணைத்து, சீனாவின் ஆளும்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான ‘பீப்பிள்ஸ் டெய்லி’ கட்டுரை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜனநாயக நிதியத்துக்கான துறையின் இயக்குனரும், துணை தலைவருமான லூயிஸா க்ரெவே, ஆசியா, மத்திய ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்களை தூண்டி விடுவதாக அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு துருக்கிஸ்தான், திபெத் விடுதலை போராட்டம் ஆகியவற்றின் மூலம் சீன அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் லூயிஸா க்ரெவே பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அரபு நாடுகளின் ஆட்சியை சீர்குலைத்த ‘அரபு வசந்தம்’ உள்ளிட்ட ஆட்சி மாற்றத்துக்கு காரணமான கருத்தரங்குகளிலும் லூயிஸா க்ரெவே என்ற இந்தப் பெண் அதிகாரி, பல முறை பங்கேற்று போரட்டக்காரர்களுக்கு கொம்பு சீவி விட்டதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ள இந்தக் கட்டுரை, அதே பாணியில் சீனாவின் கண்காணிப்பில் உள்ள ஹாங்காங்கை போராட்டக் களமாக மாற்ற அமெரிக்கா முயன்று வருவதாக தெரிவித்துள்ளது.

இந்த உண்மைகளை எல்லாம் அமெரிக்கா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்பது தங்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும், உக்ரைனில் அமெரிக்கா நடத்திய ‘தெருமுனை அரசியல்’ தோல்வியில் முடிந்ததுபோல், ஹாங்காங் போராட்டமும் தோல்வியையே தழுவும் எனவும் அந்த கட்டுரை சுட்டிக்காட்டுகின்றது.

இதற்கிடையே, போராட்டக்காரர்களுடன் இனி சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என ஹாங்காங் அரசு இன்று அறிவித்ததையடுத்து, போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

No comments:

Post a Comment