Thursday, October 16, 2014

வெளிநாட்டு கடவுச் சீட்டு உடையவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடனேயே வடக்குக்கு செல்ல வேண்டும்-:பிரிகேடியர் ருவன் வணிகசூரிய!

Thursday, October 16, 2014
இலங்கை::வெளிநாட்டு கடவுச் சீட்டு உடையவர்கள் வடக்கிற்கு விஜயம் செய்ய எவ்வித தடையும் கிடையாது மாறாக தமது பயனம், பயனத்தின் நோக்கம் மற்றும் பயனம் செல்லும் இடம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்து முன் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் என்று இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
 
நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டே ஏற்கனவே அமுலில் இருந்த இந்த நடைமுறையை மீண்டும் அமுல்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
வெளிநாட்டவர்கள் வடக்குக்குச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தை முன்னிட்டே இது செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படும் செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது என்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.
 
பாதுகாப்பு மற்றும் சமகால நடப்பு விவகாரங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுபிடியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நடைபெற்றது இதன் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பிரிகேடியர் மேலும் விளக்கமளிக்கையில் :-
 
பல வருடங்களாக பயங்கரவாத செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டிருந்த வடபகுதியை பாதுகாப்பு படையினர் மீட்டெடுத்த பின்னர் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அரசாங்கம், அரச நிறுவனங்கள், வெளிநாடுகள், ஐ.நா. அமைப்புக்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் என்று பல தரப்பட்டவர்கள் இந்த அபிவிருத்தி பணிகளுக்காக உதவி, ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்.
 
இவ்வாறு வடக்கிற்கு செல்பவர்களில் 99 வீதமானவர்கள் நல்ல நோக்கங்களுடன் சென்று வருகின்ற போதிலும் ஒரு சிலர் உதவி என்ற போர்வையில் சென்று இனங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்வதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இது தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் ஒன்றாகும். எனவே பிரிவினை வாதத்தையும் பிரச்சினைகளை மீண்டும் ஏற்படுத்த ஒரு போதும் அனுமதிக்க முடியாது இதனாலேயே ஏற்கனவே இருந்த நடைமுறையை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வெளிநாட்டு கடவுச் சீட்டுள்ளவர்கள் எவரும் வடக்கிற்கு போகவேண்டாம் அல்லது போகத் தடை என்பதல்ல மாறாக ஏதாவது ஒரு தேவைக்காக, நோக்கத்திற்காக செல்வதாயின் பாதுகாப்பு அமைச்சுக்கு அறியத்தந்து முன் அனுமதியை பெற்றுச் செல்ல முடியும்.

அவ்வாறு வடக்கிற்கு செல்பவர்கள் செயலாளர், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு, 15/5, பாலதக்ஷ மாவத்தை, கொழும்பு – 03. (Ministry of Defence and Urban Development, 15/5, Baladakshana Mawatha, Colombo – 03.) என்ற முகவரிக்கோ அல்லது 0112328109 என்ற பக்ஸ் இலக்கத்திற்கோ எழுத்து மூலம் அறியத் தறுமாறு கேட்டுக் கொள்வதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment