Thursday, October 16, 2014

மலையக தோட்டப் பகுதிகளிலுள்ள லயன் அறைகளுக்கு பதிலாக சகல வசதிகளையும் கொண்ட 50 ஆயிரம் வீடுகள்!

Thursday, October 16, 2014
இலங்கை::மலையக தோட்டப் பகுதிகளிலுள்ள லயன் அறைகளுக்கு பதிலாக சகல வசதிகளையும் கொண்ட 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 
இதன் ஆரம்ப கட்டமாக அகலவத்தை மற்றும் தெனியாய பகுதிகளில் 200 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த வாரம் இதற்காக அடிக்கல் நடப்பட்டதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் காணி முகாமைத்துவம், திட்டமிடல் மற்றும் நடவடிக்கை தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் வீரசேன அதிகாரி தெரிவித்தார்.
 
அத்துடன் மேலும் வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான காணிகளை அடையாளங் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
பாதுகாப்பு மற்றும் சமகால நடப்பு விவகாரங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுபிடியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் அதன் பணிப்பாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தலைமையில் நடைபெற்றது இதன் போது வீரசேன அதிகாரி மேலும் விளக்கமளிக்கையில் :-
 
தோட்டத் தொழிலாளர்களின் நன்மையை கருத்திற் கொண்டு 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்பித்த போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தோட்ட புரங்களில் லயன் அறைகளில் வாழும் 50 ஆயிரம் குடும்பங்களுக் லயன் அறைகளுக்கு பதிலாக சகல வசதிகளையும் கொண்ட வீட்டுத் தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
 
இதன் பிரகாரம் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய தோட்டப் புறங்களில் வீடுகளை நிர்மாணிப்பதற்கான பொறுத்தமான காணிகளை அடையாளம் காணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் பிரகாரம் அடையாளம் காணப்பட்ட பதுரெலிய டெல்கித் மற்றும் அகலவத்தையிலுள்ள கிரிவான ஆகிய இரண்டு பிரதேசங்களில் வீடுகளை நிர்மாணிக்கும் பொருட்டு அடிக்கல் நடப்பட்டது.
 
லயன் அறைகளுக்கு பதிலாக 500 தொடக்கம் 600 சதுர அடி பரப்பில் ஒரு மாடியைக் கொண்ட சகல வசதியுடைய வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது. நிர்மாணிக்கப்படும் ஒவ்வொரு வீடுகளுக்கும் தலா 12 இலட்சம் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று தோட்டப் புறங்கள் என்பதால் காணிகளை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமம் உள்ளது எனவே மேலும் இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான காணிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரிய முறையில் காணிகள் அடையாளம் காணப்பட்டவுடன் எஞ்சிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளும் படிப்படியாக முன்னெடுக்கப்படும் என்றார்.
 
இதேவேளை, கொழுப்பிலுள்ள அரசாங்க ஊழியர்களுக்கான வீடகளை நிர்மாணிக்கும் பணிகளும் வெகுவிரைவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது என்று நகர அபிவிருத்தி அதிகார சபையின் வீட்டுத் திட்ட பிரதானி ஈ. ஏ. சி. பிரியஷாந்த தெரிவித்தார். இதற்கென பொரளை ஓவல் பிரதேசத்தில் காணி அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதன் ஆரம்ப கட்டமாக 600 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது என்றார்.

No comments:

Post a Comment