Saturday, October 11, 2014

இலங்கையில் வீணாகும் தமிழக மீன்பிடி படகுகள் : பருவமழைக்கு முன் மீட்பது சாத்தியமா?.

Saturday, October 11, 2014
இலங்கை அரசு முடக்கி வைத்துள்ள, 75 படகுகளையும், வடகிழக்கு பருவமழைக்கு முன் மீட்க வேண்டும்' என, தமிழக மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 
ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி வந்ததாக கூறி, இலங்கை கடற்படை, அடுத்தடுத்து சிறைபிடித்து வருகிறது.
 
75 படகுகள் : கோர்ட் நடைமுறைகளுக்குப்பின், கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்களின் விசைப்படகுகளை மட்டும், இலங்கை அரசு விடுவிக்க மறுத்து வருகிறது. இதுவரை, தமிழக மீனவர்களின், 75 படகுகள், இலங்கை கடற்படையிடம் சிக்கியுள்ளன. இந்த படகுகள், கடலோரத்தில் நிறுத்தப்பட்டு, நீண்ட காலமாக பயன்பாடு இல்லாததால் பழுதடைந்து வருகின்றன. இவற்றை விடுவிக்க வேண்டும் என, தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தாலும், படகுகள் இன்னும் மீட்கப்படவில்லை.
 
இந்த நிலையில், 'வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், எப்படியும் படகுகளை மீட்க வேண்டும்' என, தமிழக மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
தமிழக மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறியதாவது: ஏற்கனவே, கடலோரத்தில் பயன்பாடின்றி, பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதால், படகுகள் சேதமடைந்துள்ளன.
 
வடகிழக்கு பருவமழை, ஓரிரு வாரத்தில் துவங்க உள்ளது. இதனால், கடும் மழை பெய்யும் என்பதால், படகுகள் முற்றிலும் வீணாகிவிடும்.
 
வாழ்வாதாரம் பாதிப்பு : ஏற்கனவே, கடன் பெற்றுத்தான் படகுகள் வாங்கப்பட்டுள்ளன. படகு களை மீட்காததால் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. படகுகள் வீணாகிவிட்டால், நிலைமை மோசமாகிவிடும். வடகிழக்கு பருவமழைக்கு முன், படகுகளை மத்திய அரசு மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment