Friday, October 17, 2014

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்தும் கூட பயனில்லையே!!

jayalalitha sentence suspended but conviction not stayed
Friday, October 17, 2014
புதுடில்லி:: ஜெயலலிதாவுக்கு தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதே தவிர அவர் 'குற்றவாளி' என்று அறிவிக்கப்பட்ட தீர்ப்புக்கு இன்னும் தடை விதிக்கப்படவில்லை. எனவே கர்நாடகாவில் மேல் முறையீடு விசாரணை முடிந்து அவர் குற்றமற்றவர் என்று கூறும் வரை ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது, அவரது பதவி பறிப்பும் தொடரும். உச்சநீதிமன்றம் இன்று ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் வழங்குவது என்றால், தண்டனையை நிறுத்தி வைப்பது என்று அதற்கு மற்றொரு பெயரும் உண்டு என்பது சட்டம் அறிந்த அனைவருக்கும் தெரிந்ததே. 
 
 எனவேதான் ஜெயலலிதாவின் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தண்டனை அனுபவிக்கும் ஒருவர் எப்படி ஜாமீனில் வெளியே போக முடியும் என்ற சின்ன லாஜிக் இதன் பின்னால் ஒளிந்துள்ளதால், தண்டனையை ரத்து செய்துவிட்டு ஜாமீன் வழங்குவதாக அறிவித்துள்ளனர் நீதிபதிகள். ஆனால் தண்டனை ரத்து என்பதை சிலர், குறிப்பாக ஆளும்கட்சியினர் தவறாக புரிந்துகொண்டிருப்பது அவர்களின் சமூக வலைத்தள பதிவுகள் மூலம் தெரியவருகிறது. பேட்டிகளிலும் தவறான புரிதலுடனே பேசிவருகின்றனர்.
 
சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவித்துதான் 4 ஆண்டு சிறை, ரூ.100 கோடி அபராதம் விதித்தது சிறப்பு நீதிமன்றம். இந்த தண்டனையை நிறுத்தக்கோரி கர்நாடக ஹைகோர்ட்டில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு வரும் 27ம்தேதி விசாரணைக்கு வருகிறது. ஆனால், இவர்கள் ஜாமீன் கோரி போட்ட மனுதான் ஹைகோர்ட்டில் தள்ளுபடியானது. ஹைகோர்ட் தள்ளுபடி செய்ததால் ஜெயலலிதா தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுள்ளது. ஆனால், தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஹைகோர்ட்டில் நிலுவையிலுள்ளதால், அதில் சுப்ரீம்கோர்ட் தலையிட்டு எந்த முடிவையும் எடுக்க முடியாது. எனவே கர்நாடக ஹைகோர்ட்டில் அந்த வழக்கு விசாரணை முடிந்து ஜெயலலிதா குற்றமற்றவர் என்று தீர்ப்பு சொல்லும்வரை அவர் குற்றவாளி என்ற அவப்பெயருடனே இருப்பார்.
 
குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தால்தான் அவர் தேர்தலில் போட்டியிட முடியும். ஒருவேளை ஹைகோர்ட் அவரை குற்றவாளிதான் என்று அறிவித்து, கீழ்கோர்ட் தீர்ப்பை தூக்கிப்பிடித்தால், ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றம் செல்லமுடியும். அங்கு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு தவறு என்று கூறி ஜெயலலிதாவை விடுவித்தால் தேர்தலில் போட்டியிடும் தகுதியை பெறுவார். எனவே இந்த விசாரணைகள் முடியும்வரை, ஜெயலலிதா எந்த பதவிக்கும் வர முடியாது, தேர்தலிலும் போட்டியிட முடியாது. இப்போது விடுதலையாகி ஜெயலலிதா சென்னை வந்தாலும் அவரால் முழு நேர அரசியல்வாதியாக எதிலும் ஈடுபட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment