Friday, October 31, 2014

5 பேருக்கு தூக்கு தண்டனை: 10 ஆயிரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்}

Friday, October 31, 2014
ராமேசுவரம்}ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் அகஸ்ட்ஸ், எமர்சன், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகியோர் கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்களை நடுக்கடலில் கைது செய்த இலங்கை கடற்படையினர் ஹெராயின் போதை பொருளை கடத்தி வந்ததாக வழக்கு தொடர்ந்தனர்.

இவர்களோடு இலங்கையை சேர்ந்த 3 மீனவர்களும், இதே வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்து வந்த கொழும்பு உயர்நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 5 பேர் உள்பட 8 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.

இந்த தகவல் நேற்று மாலை 3.30 மணிக்கு தங்கச்சிமடம் மீனவர்களுக்கு கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், ராமேசுவரம்–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மீனவப் பெண்கள், குழந்தைகள் என மீனவர்கள் குடும்பம் குடும்பமாக வந்ததால் போராட்டம் வலுப்பெற்றது.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

மறியலில் ஈடுபட்டிருந்த சிலர் வன்முறையில் இறங்கினர். சாலையோரம் இருந்த டிரான்ஸ் பார்மர்களுக்கு தீ வைத்த அவர்கள் குடிநீருக்காக சாலையோரம் வைக்கப்பட்டிருந்த ராட்சத குழாய்களை உருட்டி ரோட்டில் தடை ஏற்படுத்தினர். இதனால் அங்கு பதற்றம் உருவானது.

இதற்கிடையில் அக்காள் மடத்தில் இருந்து வேர்க்கோடு நோக்கி அரசு பஸ் வந்தது. இந்த பஸ்சை மறித்த மீனவர்கள் பயணிகளை கீழே இறக்கிவிட்டனர். பின்னர் அந்த பஸ்சுக்கு தீ வைத்துவிட்டனர். இதில் பஸ் முழுவதும் எரிந்து நாசமானது.

தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த போக்குவரத்து அறிவிப்பு பலகைகளை பிடுங்கி சாலையின் நடுவே போட்டனர். அதன்மீது பழைய டயர்களை போட்டு தீயும் வைத்தனர். இதனால் அந்த பகுதியில் புகை மண்டலமாகவும், நெருப்பு மயமாகவும் காட்சியளித்தது.

ஒரு பிரிவினர், ரெயில் தண்டவாளங்களை உடைத்து சேதப்படுத்தினர். இதனால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராமேசுவரம் வரவேண்டிய ரெயில்கள் மண்டபம், ராமநாதபுரம் பகுதிகளில் நிறுத்தப்பட்டன. ராமேசுவரத்தில் இருந்து செல்ல வேண்டிய ரெயில்களும் நிறுத்தப்பட்டன. தண்டவாளம் சேதப்படுத்தப்பட்டதால் ரெயில்கள் இயக்க முடியாத நிலை உருவானதை தொடர்ந்து பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இரவு 10.30 மணிக்கு மேல் அன்வர் ராஜா எம்.பி., மாவட்ட கலெக்டர் நந்தகுமார், காவல் கண்காணிப்பாளர் மயில் வாகணன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவாத்தை நடத்தினர்.

அப்போது மீனவர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசுக்கு எழுதிய அவசர கடிதத்தை மீனவர்களிடம் அன்வர் ராஜா எம்.பி. காண்பித்தார். 5 மீனவர்களின் தூக்கு தண்டனையை எதிர்த்து அரசு சார்பில் உடனடியாக அப்பீல் செய்யப்படும் மத்திய அரசு மூலம் இலங்கை அரசுடன் பேசி துரித நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் மீனவர்கள் குழுவை டெல்லிக்கு அழைத்து செல்கிறேன் என அவர் உறுதி அளித்தார். இதனை ஏற்று இரவு 11.45 மணியளவில் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதன்பிறகு மெல்ல.. மெல்ல... இயல்பு வாழ்க்கை திரும்பியது. இதன் காரணமாக இன்று அதிகாலை 2 மணியளவில் மதுரை–ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் இயக்கப்பட்டன.

இருப்பினும் பதற்ற நிலையை கண்காணிக்க போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். ரெயில் தண்டவாளமும் சீரமைக்கப்பட்டதால் போக்குவரத்து தொடங்கியது.

இந்த நிலையில் தங்கச்சிமடத்தில் இன்று மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 5 மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. முதல்கட்டமாக இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ராமேசுவரம், மண்டபம், தங்கச்சிமடம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இந்த பகுதிகளில் இருந்து கடலுக்கு செல்லும் 1500–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் நிறுத்தப்பட்டன. சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மீனவர்களையும் போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் இந்த போராட்டம் மேலும் தீவிரமடையும்.

No comments:

Post a Comment