Saturday, September 20, 2014

புலிகளின் பாக்., உளவாளியிடம் ரகசிய விசாரணை தொடங்கியது!

Saturday, September 20, 2014
சென்னை::சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளியை, தேசிய புலனாய்வு படை போலீசார் காவலில் எடுத்து விசாரணையை தொடங்கிவிட்டனர்.
கடல் வழியாக மும்பை நகருக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது போல, இலங்கையை தளமாக வைத்து, கடல் வழியாக தமிழகத்திற்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக, ஏற்கனவே எச்சரிக்கை தகவல்கள் வந்துள்ளன.
 
இதை நிரூபிக்கும் வகையில், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் அமீர்சுபேர்சித்திக், பாஸ் என்ற ஷா ஆகியோர், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.உளவு நிறுவனத்தின் கையாட்களாக செயல்பட்டு, தங்களது உளவாளிகளை, தமிழகத்திற்குள் ஊடுருவ விட்டுள்ளனர்.
 
அவ்வாறு ஊடுருவிய பாகிஸ்தான் உளவாளிகள் 6 பேரை ஏற்கனவே தமிழக கியூ பிரிவு போலீசாரும், தேசிய புலனாய்வு படை போலீசாரும் வேட்டையாடி பிடித்துள்ளனர்.
 
இந்த நிலையில், சென்னை சாலிகிராமம் முத்தமிழ்நகரில் 7-வதாக ஒரு முக்கிய பாகிஸ்தான் உளவாளியை தேசிய பாதுகாப்பு படையினர் அதிரடி வேட்டையில் சமீபத்தில் கைது செய்துள்ளனர். அந்த உளவாளியின் பெயர் அருண் செல்வராசன். இவரும் இலங்கையைச் சேர்ந்தவர்தான். இவர் ஏற்கனவே பிடிபட்டுள்ள ஜாகீர்உசேனின் கூட்டாளி என்று சொல்லப்படுகிறது. திருச்சியில் பிடிபட்ட தமீம்அன்சாரிக்கும் நெருக்கமாக இருந்துள்ளார்.
 
அருண் செல்வராசனிடம் நடத்திய விசாரணையில் தமிழகத்தை தகர்க்க பல்வேறு நாசவேலைகளை செய்ய, சதித்திட்டம் தீட்டி இருந்ததாக, திடுக்கிடும் தகவல்களை வாக்கு மூலமாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் விமானம் ஓட்ட, சென்னையில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வந்துள்ளது.
 
அமெரிக்காவில் இரட்டை கோபுரங்களை, விமானத்தை மோத விட்டு தகர்த்துபோல, அருண்செல்வராசன் மூலம், சென்னையில் முக்கிய அரசு கட்டிடத்தில் விமானத்தை மோத விட்டு, தகர்க்க திட்டமிட்டு இருக்கலாம் என்ற அதிரடி தகவலும் உள்ளது.
 
உளவாளி அருண்செல்வராசனை 6 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த, பூந்த மல்லி சிறப்பு கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. கோர்ட்டு உத்தரவு அடிப்படையில், நேற்று முன்தினம்புழல் மத்திய சிறையில் இருந்து அருண்செல்வராசனை, தேசிய புலனாய்வு படை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
 
கிண்டியில் உள்ள தேசிய புலனாய்வு படை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. சென்னையில் பல்வேறு இடங்களுக்கு அவரை அழைத்து சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அவருடன் மேலும் 5 உளவாளிகள், சென்னை நகருக்குள் ஊடுருவி இருப்பதாக தெரிய வந்துள்ளது. அது பற்றி விசாரணை நடத்த உள்ளனர்.
 
இலங்கைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தவும், அடுத்த கட்ட திட்டம் உள்ளது. இதற்கு மத்திய அரசு வாயிலாக, இலங்கை அரசின் அனுமதியைப்பெறவும் தேசிய புலனாய்வு அமைப்பினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
 
ஆனால் விசாரணைக்கு கூட மீண்டும் இலங்கைக்கு, என்னை அழைத்து செல்லாதீர்கள், எனது உயிருக்கு ஆபத்து உள்ளது, அங்கு அழைத்துச் சென்றால், என்னை உயிரோடு மீண்டும், அழைத்து வர, உங்களால் இயலாது, என்றும் முதல்கட்ட விசாரணையில், அருண்செல்வராசன் கூறியதாக, தெரிய வந்துள்ளது.
 
வருகிற 23-ந்தேதி அன்று மாலை 4 மணி அளவில், அருண்செல்வராசன், மீண்டும் பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்.

No comments:

Post a Comment