Tuesday, September 30, 2014

தீவிரவாதிகளிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள்: பிலிப்பைன்சில் சிக்கிய ஜெர்மானியர்கள் அரசுக்கு கோரிக்கை!

Tuesday, September 30, 2014
மணிலா::பிலிப்பைன்சில் செயல்பட்டுவரும் அபு சயப் என்ற தீவிரவாதக் குழு வெளிநாட்டவர்களைக் கடத்துவதன்மூலம் கடந்த 2000ஆவது ஆண்டு துவக்கத்தில் முக்கியத்துவம் பெறத் துவங்கியது.

அல்கொய்தாவுடனும் இந்த இயக்கம் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. இருப்பினும் பின்னாளில் இந்த இயக்கம் பணத்திற்காகவும், ஏனைய குற்றவியல் நடவடிக்கைகளுக்காகவும் மனிதக் கடத்தல்களை மேற்கொள்ளத் துவங்கியதாக அரசியல் ஆய்வாளர்களும், பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதம் மலேசியாவின் போர்னியோ தீவுகளுக்கும், தெற்கு பிலிப்பைன்சிற்கும் இடையே சிறிய படகில் சென்று கொண்டிருந்த இரண்டு ஜெர்மானியர்களை அபு சயப் தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்தினர். கடத்தப்பட்டவர்களில் ஒருவர் 70 வயது நிரம்பிய ஸ்டீபன் ஒகோனெக் என்ற மருத்துவர்; மற்றொருவர் 50 வயது நிரம்பிய ஹென்றிக் டைலேன் என்ற பெண்மணி ஆவார்.

ஈராக்கிலும், சிரியாவிலும் போரிட்டுவரும் ஐஎஸ் தீவிரவாதிகளைத் தாக்குவதில் அமெரிக்காவிற்கு உதவுவதை ஜெர்மனி நிறுத்தவேண்டும் என்றும், தாங்கள் கைப்பற்றியுள்ளவர்களுக்கான பிணைத் தொகையை அளிக்கவேண்டும் என்றும் அபு சயப் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

வரும் அக்டோபர் 10ஆம் தேதியை இதற்கான காலக்கெடுவாகக் குறிப்பிட்டுள்ள இந்த இயக்கம், அவ்வாறு செய்யாவிடில் இவர்களில் ஒருவரைப் பலியிடுவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், ஜெர்மனியும், பிலிப்பைன்ஸ் அரசும் தங்களை விடுவித்து பாதுகாக்க வேண்டும் என்று பிணைக்கைதிகள் இருவரும் வேண்டுகோள் விடுத்துள்ளது இன்று உள்ளூர் வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. இந்த செய்தி உண்மையாகத் தோன்றியதாகவே புலனாய்வுத் துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment