Tuesday, September 2, 2014

ராமேசுவரம் மீனவர்கள் சிறைபிடிப்பு!

Tuesday, September 02, 2014
ராமேசுவரம்::38 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்களில் 9 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

இந்தியா, இலங்கை கடல் எல்லையான கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி சிறைபிடித்து சென்று வருகின்றனர். அப்போது அவர்களது படகுகளையும் கொண்டு சென்று விடுகின்றனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அவ்வப்போது விடுவிக்கப்பட்டபோதும், அவர்களது படகுகள் மட்டும் விடுவிக்கப்படவில்லை. இந்த நிலையை கண்டித்தும், இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட 64 விசைப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் கடந்த ஜூலை 25–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் தொடங்கினர்.

கடந்த 38 நாட்களாக வேலை நிறுத்தத்தை அவர்கள் நடத்தியபோதும், விசைப்படகுகள் விடுவிக்கப்படுவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இதனை தொடர்ந்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு செப்டம்பர் 1–ந்தேதி முதல் மீண்டும் மீன்பிடிக்க செல்வது என மீனவர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று ராமேசுவரத்தில் இருந்து 500–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது காற்றின் வேகம் பலமாக இருந்தது. இதில் 478–ம் எண் கொண்ட படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விட்டது. அதிலிருந்த 4 மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதனை 544–ம் எண் கொண்ட படகில் இருந்தவர்கள் பார்த்து அவர்களை காப்பாற்றினர்.

பின்னர் அந்த படகில் 9 மீனவர்களும் கரை திரும்பி கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் அங்கு வந்து அவர்களை சிறைபிடித்தனர். படகுடன் சிறைபிடிக்கப்பட்ட 9 மீனவர்களையும் அவர்கள் நெடுந்தீவுக்கு கொண்டு சென்றுவிட்டனர். இன்று காலை ராமேசுவரம் கடற்கரைக்கு படகுகள் ஒவ்வொன்றாக திரும்பிய போதுதான் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட விவரம் தெரியவந்தது.

இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் நேற்று கடலுக்கு சென்ற விசைப்படகுகளில் மேலும் 3 படகுகள் கரை திரும்ப வில்லை என கூறப்படுகிறது. அவை காற்றின் வேகத்தில் கடலில் கவிழ்ந்ததா? அல்லது இலங்கை கடற்படையினர் அவர்களையும் சிறைபிடித்து சென்றார்களா? என்பது ‘மர்ம’மாக உள்ளது.

38 நாட்களுக்கு பிறகு வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் வாழ்வை இழந்து நிற்பது மீனவர் குடும்பங்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment