Saturday, August 23, 2014

காஷ்மீர் எல்லையில் இன்று காலை 22 இந்திய நிலைகளில் பாக். ராணுவம் தாக்குதல் -2 பேர்சாவு; பதற்றம் நீடிப்பு!

Saturday, August 23, 2014
ஜம்மு::காஷ்மீர் எல்லையில் இன்று அதிகாலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இந்திய எல்லை பாதுகாப்பு படையின் 22 நிலைகளில் அவர்கள் நடத்திய தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். நமது ராணுவம் பதிலுக்கு தாக்குதல் நடத்தி வருகிறது. துப்பாக்கிச் சண்டை காரணமாக, எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த ஒரு மாதமாகவே காஷ்மீர் எல்லையில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
 
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த வாரம் காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போதும், எல்லையில் பாகிஸ்தான் திடீர் தாக்குதல் நடத்தியது. தற்போது, பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் ஆட்சி ஆட்டம் கண்டு வருகிறது. தேர்தலில் முறைகேடுகள் செய்து ஆட்சிக்கு வந்ததாக கூறி, அவரை பதவி விலக வலியுறுத்தி முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் கட்சியினரும், மதகுரு காத்ரியின் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றதால், நாடாளுமன்றம், பிரதமரின் இல்லம் ஆகியவை அமைந்துள்ள பகுதிகளுக்கு செல்லும் சாலைகளை பெரிய கன்டெய்னர்களை கொண்டு மூடியுள்ளனர்.
 
எட்டு நாளாக நடக்கும் போராட்டம் காரணமாக அங்கு அரசியல் ஸ்திரமற்ற நிலை காணப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று அதிகாலையில் இந்திய எல்லை பாதுகாப்பு படையின் நிலைகள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். காஷ்மீர் எல்லையில் ஆர்.எஸ்.புரா மற்றும் அர்னியா பகுதியில் அமைந்துள்ள 17 நிலைகள் உள்பட மொத்தம் 22 நிலைகளை குறி வைத்து அவர்கள் தாக்குதல் நடத்தினர். சக்திவாய்ந்த துப்பாக்கிகளால் அவர்கள் சரமாரியாக சுட்டனர். எல்லையோரம் அமைந்துள்ள ஜோடாபார்ம் கிராமத்தில் முகமது அக்ரம் என்பவர் தனது குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்த போது, அவர்கள் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதில், முகமது அக்ரம், அவரது 13 வயது மகன் அஸ்லாம் ஆகியோர் அதே இடத்தில் உயிரிழந்தனர். அக்ரமின் மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஜம்மு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று அதிகாலை முதல் நமது எல்லை பாதுகாப்பு படை நிலைகளை குறிவைத்து அவர்கள் சரமாரியாக சுட்டு வருகின்றனர். கடந்த வாரத்தில் அவர்கள் அத்துமீறி தாக்கத் தொடங்கியதால், எல்லையோர கிராமங்களில் வசிக்கும் 2000 மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் தற்போது பள்ளி கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment