Thursday, July 3, 2014

பொதுபல சேனா இயக்கத்தின் எந்தவொரு நிகழ்விலும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ பங்கேற்றதில்லை: ருவான் வனிகசூரிய!

Thursday, July 03, 2014
பொதுபல சேனா இயக்கத்தின் எந்தவொரு நிகழ்விலும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ பங்கேற்றதில்லை என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பொதுபல சேனா இயக்கத்துடனோ அல்லது அதன் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரருடனோ பாதுகாப்புச் செயலாளர் எவ்விதமான தொடர்புகளையும் பேணவில்லை என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த இயக்கத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் நிதி உதவிகளை வழங்கியதாக சில உள்நாட்டு வெளிநாட்டு ஊடங்களில் வெளியான தகவல்களும் அடிப்படையற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் காலியில் தியான மண்டபமொன்றின் திறப்பு விழாவில் பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்றதாகவும், அந்த நிகழ்வு பொதுபல சேனாவினால் ஒழுங்கு செய்யப்பட்டதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பௌத்த கலாச்சார மையத்தின் ஸ்தாபகர் கிரம விமலஜோதி தேரர் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் வேந்தர் சுமனஜோதி நாயக்க தேரர் ஆகியோரின் அழைப்பிற்கு அமையவே பாதுகாப்புச் செயலாளர் இந்த நிகழ்வில் பங்கேற்றார் என குறிப்பிட்டுள்ளார். பொதுபல சேனா அமைப்பு இந்த நிகழ்விற்காக அழைப்பு விடுக்கவில்லை என்ற போதிலும், நிகழ்வில் கலபொடத்தே ஞானசார தேரரும் பங்கேற்றிருந்தார் என அவர் தெரிவித்துள்ளார். ஜெர்மனிய பிரஜை ஒருவரினால் நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் இந்த தியான மண்டபம் அமைக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment