Wednesday, July 30, 2014

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் ஜெயலலிதா கடிதம்!

Wednesday, July 30, 2014
சென்னை::இலங்கை கடற்படையால் ஏற்கனவே சிறைபிடிக்கப்பட்ட 43 மீனவர்கள் உட்பட 93 மீனவர்களை உடனடியாக விடுவிக்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
 
தமிழகத்தில் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை தாக்குவதும் பிறகு அவர்களை கைது செய்வதும் மீன்பிடி உடமைகளை பறிமுதல் செய்வதும் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து நடைபெறுகிறது. இதுபோன்ற அட்டூழியங்களை தடுக்க கட்சத்தீ வை மீட்பதுதான் நிரந்தர தீர்வு என்று கூறிவருகிறார் முதல்வர் ஜெயலலிதா. இதுதொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலையில் நாகப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 50 மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ளது. இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் சோக அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று ஒரு கடிதம எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா எழுதியிருப்பதாவது:-
 
5 இயந்திர படகுகளில் தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 50 மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ள சம்பவத்தை உங்களின் கவனத்திற்கு ஆழ்ந்த கவலையுடன் கொண்டுவரும் நோக்கத்துடன் இக்கடிதத்தை எழுதுகிறேன். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து சென்ற மீனவர்கள் நேற்று அதிகாலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த 22-ம் தேதி நான் ஒரு கடிதம் எழுதினேன். அதில் 9 படகுகளில் சென்ற 43 மீனவர்கள் கைது செய்யப்பட்ட விபரம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அவ்வாறு கைது செய்யப்பட்ட 43 மீனவர்களும் அவர்களது 9 படகுகளும் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை. தங்களது அரசின் துரித நடவடிக்கையால் இதற்கு முன்பு 225 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 
இருப்பினும் 55 படகுகளை இலங்கை இன்னும் விடுவிக்கவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர் சமுதாயம் கவலையில் மூழ்கியுள்ளது. எனவே இலங்கையின் வசம் உள்ள மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் ஒருமுறை உங்களை கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களை இலங்கை அரசு கைவிடுமாறு இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். பாக் ஜலசந்தியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை தமிழகம் வலியுறுத்தி வருகிறது. மேலும் கட்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியே. அதை மீட்பதே நிரந்தர தீர்வாகும். எனவே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே சர்வதேச கடல் எல்லைக்கோடு நிர்ணயிப்பது ஒரு தீர்வு ஆகாது. 1974 மற்றும் 76 ஒப்பந்தங்களை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே கைது செய்யப்பட்ட 43 மீனவர்கள் உட்பட 93 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் ஒரு முறை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். மீனவர்களின் 62 படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment