Tuesday, July 22, 2014

அயல் நாடுகளுடன் கடந்த காலத்தில் நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகவே, இலங்கையில் புலிபயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட் டது: மேஜர் ஜெனரல் உதய பெரேரா!

Tuesday, July 22, 2014
இலங்கை::இராஜதந்திர ரீதியாக அயல் நாடுகளுடன் கடந்த காலத்தில் நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகவே, இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு இன்று அமைதியும் நிம்மதியும் நிலைகொண்டுள்ளது என யாழ். மாவட்டப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் 33 அலுவலர்களுக்கான சுயமதிப்பீட்டு தலைமைத்;துவப் பயிற்சி செயலமர்வொன்று யாழ்., காங்கேசன்துறை, தல்செவன விருந்தினர் விடுதியில் நடத்தப்பட்டு வருகின்றது.

இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் நேற்று ஆரம்பமான இந்த செயலமர்வு, தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய உதய பெரேரா, 'பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியிருந்த இலங்கை, அதிலிருந்து முற்றாக விடுபடுவதற்கு, இந்தியா, சீனா உட்பட ஏனைய அயல் நாடுகளுடன் பேணப்பட்டு வந்த நட்புறவுச் செயற்பாடுகள் காரணமாகவே எமக்கு வெற்றி கிடைத்தது' என்றார்.

'கடந்த காலங்களில் தென்னிலங்கை கிராமங்களில் நாளாந்தம் ஐந்து, ஆறு மரணச் சடங்குகள் நடைபெற்று வந்தன. இன்று அத்தகைய நிலைமை காணப்படவில்லை. குறிப்பாக இன்று நாட்டில் அபிவிருத்தி செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன' என்றும் அவர் குறிப்பிட்டார்.  

'கடந்த யுத்த காலத்தில் நவீன ஆயுதங்களை நாங்கள் முதலில் பயங்கரவாதிகளிடமிருந்தே பெற்றுக்கொண்டோம். அதன் பின்னரே நாம் அதனை உரிய முறையில் பெறக்கூடியதாக இருந்தது.   

2006ஆம் ஆண்டின் பின்னர் கடுமையான எதிர்த் தாக்குதல்களை நாங்கள் மேற்கொள்ளத் தொடங்கியதும்  புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆட்டம் காணத் தொடங்கினார்.  புலிகளுக்கு 32 நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.

அப்போது. வன்னி மாவட்டத்தில் நிலைகொண்டிருந்த 80 ஆயிரம் படையினர் இரவு, பகல் பாராது வியர்வையுடன் வாரக் கணக்காக தங்கள் உடைகளைக் கூட மாற்றாது, கண் அயராமல் செயற்பட்டனர்.

இராணுவத்தின் உயர் அதிகாரிகள் முதல் சிப்பாய்கள் வரையில் இத்தகையே நிலைமையே காணப்பட்டன. இதனை நான் எனது கண்களினால் கண்டுள்ளேன். இந்த வெற்றியானது எமது நாட்டுக்கு மட்டுமல்லாமல் தெற்காசியாவுக்கே உரியதாக வெற்றியாகும்" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

'சுங்கத் திணைக்கள அலுவலர்களின் சேவை என்பது எமது நாட்டு மக்களுக்கு மட்டும் உரியது அல்ல. இது உலக நாட்டு மக்களுக்கும் உரியது. சுங்க அலுவலர்கள் பயிற்சிகளை தொடர்ந்து மேற்;கொண்டு வருவதன் மூலம் கூடிய அறிவையும் அனுபவத்தினையும் பெற்றுக்கொள்ள முடியும்" என்று யாழ். தளபதி மேலும் கூறினார்.

No comments:

Post a Comment