Wednesday, July 23, 2014

இலங்கை கடற்படை சிறைபிடித்த 43 மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை: பிரதமருக்கு ஜெயலலிதா வலியுறுத்தல்!

Wednesday, July 23, 2014
சென்னை::பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கடந்த 21ம் தேதி ஜகதாபட்டினம் மற்றும் கோட்டைபட்டினம் ஆகிய பகுதியில் இருந்து 5 படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற 18 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது. அவர்கள் இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அதே போல் அதே 21ம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 மீனவர்களையும் அவர்களது 4 படகுகளையும் சிறைபிடித்துள்ளனர். ஏற்கனவே கடந்த 16ம் தேதி புதுகோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

இவ்வாறு தொடர்ந்து இலங்கை கடற்படையினர் நடத்திவரும் தாக்குதல் மற்றும் சிறைபிடிப்பு சம்பவங்கள் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது அரசு எடுத்து வரும் தொடர் முயற்சியால் இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்த 225 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், அவர்களது 46 படகுகள் தொடர்ந்து இன்னும் விடுவிக்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பாக் ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமானால் சட்டவிரோதமாக இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சதீவு மீட்கபட வேண்டும் என்று தமிழக அரசு கோரி வருகிறது.     மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பது தொடர்பாக கடந்த 2 தினங்களுக்கு முன்பு தங்களுக்கு எழுதிய கடிதத்தில் எனது பரிந்துரைகளையும் விளக்கி குறிப்பிட்டிருந்தேன். இந்த சூழலில் இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல் காரணமாக தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ள 43 மீனவர்கள் மற்றும் அவர்களது 55 படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment