Tuesday, July 22, 2014

ராமேஸ்வரம், புதுக்கோட்டையை சேர்ந்த 38 மீனவர்கள் சிறைபிடிப்பு: 9 விசைப்படகுகள் பறிமுதல்!

Tuesday, July 22, 2014
ராமேஸ்வரம்::பாக்ஜலசந்தி அருகே கடலில் நேற்றிரவு மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 38 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். 9 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால், ராமேஸ்வரம், ஜெகதாப்பட்டினம் மீனவர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
 
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று அதிகாலை 400க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே கடலில் நேற்று மாலை நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை வழிமறித்து மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். மீனவர்கள் தினகரன், ஜெபமாலை ஆகியோருக்கு சொந்தமான இரண்டு படகுகள் உட்பட 4 மீன்பிடி படகுகளை சிறைபிடித்தனர்.
 
மேலும், படகுகளில் இருந்த மீனவர்கள் ரொமிரோ, அருள்ராஜ், கொச்சேரியன், நம்புபிச்சை, பாலசுந்தரம், வெலிஸ்டன், மெல்டன், கிறிஸ்துராஜ், அலங்காரம், ரீகன், மணி உள்ளிட்ட 20 பேரையும் சிறைப்பிடித்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். இதேபோல், புதுகை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து 239 படகுகளில் சுமார் 900 மீனவர்களும், ஜெகதாபட்டினத்திலிருந்து 235 படகுகளில் சுமார் 850 மீனவர்களும் கடந்த 20ம் தேதி மாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று மதியம் இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படை அவர்களை விரட்டியடித்தது.
 
கோட்டைபட்டினத்தை சேர்ந்த செயிபு என்பவரது படகில் சென்ற வினோத்(22), மாரியப்பன்(28), முருகேசன்(35), ஆரோக்கியதாஸ் என்பவரது படகில் சென்ற சுப்பையா(45), அடைக்கலம்(55), மணி(40), சித்திரவேலு(40), பாக்கியம் என்பவரது படகில் சென்ற விஜி(38), சதீஷ்(30), நடராஜ்(55), ராஜேஷ்(35), ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவரின் படகில் சென்ற மகேந்திரன்(30), பாரதி(24), கோவிந்தன்(56) மற்றும் மேலும் ஒரு படகில் இருந்த 4 பேர் என 18 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். அவர்களது 4 படகுகளையும் பறிமுதல் செய்தனர். இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 38 பேரிடமும் இலங்கை தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடற்படை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
பிடிபட்ட மீனவர்கள் அனைவரும் இன்று மாலைக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது. இதற்கிடையே, படகுகளுடன் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டதால் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் மீனவர்களிடையே பதற்றம் நிலவுகிறது.ஏற்கெனவே சிறைபிடிக்கப்பட்ட 46 படகுகளுடன் நேற்று இரவில் பிடிபட்ட 9 படகுகளையும் சேர்த்து மொத்தம் 54 மீன்பிடி விசைப்படகுகள் இலங்கை கடற்படையினர் வசம் உள்ளன. சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் வரும் 24ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment