Wednesday, June 4, 2014

தற்காலிக சபாநாயகரானார் கமல்நாத் புதிய மக்களவை இன்று கூடியது முண்டே மறைவுக்கு இரங்கல்!

Wednesday, June 04, 2014
புதுடெல்லி::புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 16வது மக்களவை இன்று கூடியது. மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.   சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பா.ஜ 282 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார். 23 கேபினட் அமைச்சர்கள் உள்பட 45 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை 10 மணிக்கு நடந்த விழாவில் 16வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் மூத்த எம்பி கமல்நாத் பதவி ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, மக்களவை காலை 11 மணிக்கு தற்காலிக சபாநாயகர் கமல்நாத் தலைமையில் கூடியது. பிரதமர் நரேந்திரமோடி உள்பட அமைச்சர்கள், எம்பிக்கள் கலந்து கொண்டனர். மக்களவை செயலாளர் பி.ஸ்ரீதரன், 16வது மக்களவை அமைக்கப்பட்டதற்கான அறிக்கையை வாசித்தார். பின்னர், மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் குறிப்பை கமல்நாத் வாசித்தார். உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மக்களவை மீண்டும் நாளை கூடுகிறது. அப்போது, புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கமல்நாத், பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அவருக்கு மூத்த உறுப்பினர்களான பிஜு ஜனதா தளத்தை சேர்ந்த அர்ஜுன் சரண்சேத்தி, தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த பி.ஏ.சங்மா ஆகியோர் உதவுவார்கள். எம்பிக்கள் பதவியேற்பு நாளை மறுதினமும் நீடிக்கும். புதிய சபாநாயகர் தேர்தல் வரும் 6ம் தேதி நடத்தப்படுகிறது. இந்த தேர்தலை தற்காலிக சபாநாயகர் கமல்நாத் நடத்துவார். சபாநாயகர் பதவிக்கு ஆளும்கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் சுமித்ரா மகாஜன் அல்லது முன்னாள் துணை சபாநாயகர் கரியமுன்டா நிறுத்தப்படலாம் என தெரிகிறது. ஆளும்கட்சிக்கு தனி மெஜாரிட்டி உள்ளதால், சபாநாயகர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் யாரும் நிறுத்தப்பட மாட்டார்கள். இதனால், போட்டியின்றி சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இதைத் தொடர்ந்து, மக்களவை, மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டம் 9ம் தேதி நடக்கிறது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார். அப்போது அவர் புதிய மத்திய அரசின் செயல் திட்டங்களை எடுத்துரைப்பார். ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து மக்களவையில் ஜூன் 10ம் தேதியும், மாநிலங்களவையில் ஜூன் 11ம் தேதியும் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார். பின்னர், இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படும். இம்மாத இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். அப்போது ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.இன்று ஒரே உறுப்பினர் மக்களவையில் மொத்தம் 543 உறுப்பினர்கள். 16வது மக்களவை அமைக்கப்பட்டதை தொடர்ந்து, இதன் தற்காலிக சபாநாயகராக கமல்நாத் இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து, அவை கூடி முண்டே மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது. புதிய உறுப்பினர்கள் நாளை பதவியேற்க உள்ளார்கள். இந்நிலையில், மக்களவையில் இன்று ஒரே உறுப்பினராக கமல்நாத் திகழ்கிறார். இதற்கு முன்பு இப்படியொரு நிலை ஏற்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment