
Thursday, June 05, 2014
புதுடெல்லி::மக்களவையில் இன்று எம்பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கமல்நாத் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி, பாஜ மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் முதலில் பதவியேற்றனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பா.ஜ 282 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ளார். 23 கேபினட் அமைச்சர்கள் உள்பட 45 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்நிலையில், 16வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் மூத்த எம்பி கமல்நாத் பதவி ஏற்றார். அவர் தலைமையில் மக்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மக்களவை மீண்டும் இன்று காலை 11 மணிக்கு கூடியது. உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கமல்நாத், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முதலில் பிரதமர் மோடி, பாஜ மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் எம்.பி.க்களாக பதவியேற்றனர். தொடர்ந்து, மாற்று சபாநாயகர்கள், மூத்த உறுப்பினர்கள் என வரிசையாக எம்பிக்கள் பதவியேற்றனர். நாளையும் எம்பிக்கள் பதவியேற்பு தொடருகிறது.எம்பிக்கள் பதவியேற்பு முடிந்ததும், நாளை மாலை புதிய சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலை தற்காலிக சபாநாயகர் கமல்நாத் நடத்துவார். சபாநாயகர் பதவிக்கு ஆளும்கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் சுமித்ரா மகாஜன் நிறுத்தப்படுகிறார். அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது.
No comments:
Post a Comment