Saturday, June 14, 2014
ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலுடன் புலம்பெயர் புலிகளுக்கு தொடர்பு காணப்படுகின்றதா என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் 85 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருட்களை காவல்துறையினர் மீட்டதுடன், இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்திருந்தனர்.
வர்த்தகர்களைப் போன்று தோன்றி குறித்த நபர்கள் இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலிகளின் பிரதான வருமான வழிகளில் ஒன்றாக ஹெரோயின் போதைப் பொருள் காணப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களுடன் தொலைபேசி தொடர்புகளைப் பேணியவர்கள் பற்றிய தகவல்களும் திரட்டப்பட்டு வருவதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
எனினும் இலங்கைக்குள் கடத்தப்படும் பெருமளவு போதைப்பொருட்கள் வியாபாரத்துடன் இலங்கையின் ஆளும் தரப்பு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்கள், உயர் மட்ட அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக பலமுறை ஆதாரபூர்வ தகவல்கள் வெளியிடப்பட்ட போது இதுவரை அரசாங்கம் உருப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
குலனிப்பிரதேசத்தை மையமாக வைத்து அமைச்சர் மேர்வி டீ சில்வா தனது உதவியாளர்கள் மூலம் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை கட்டுப்பாட்டுள் வைத்திருப்பது நாடறிந்த விடயம்.
அதுபோல் கொலன்னாவைப் பிரதேசத்தை மையமாக வைத்து ஆளும் தரப்பின் முக்கிய பாராளுமன்ற உறுப்பிர்கள் சிலர் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியை கட்டுப்பாட்டுள் வைத்திரக்கின்றனர்.
குறிப்பாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்த்தர் பாரதலக்ஸ்மன் பிறேமச்சந்திர கொலை செய்யப்பட்டதற்கு அவரது பிரதேசமான கொலன்னாவவில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் வியாபாரத்தை தடுக்க முற்பட்டதே காரணம் என பலமான குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் இலங்கையின் போதைப்பொருள்
சாம்ராஜயத்தை கட்டுப்பாட்டுள் வைத்திருப்போர் ஆளும் தரப்பு
முக்கியஸ்த்தர்களே என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது நோக்கத்தக்கது.

No comments:
Post a Comment