Friday, April 11, 2014
இலங்கை::வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினரது துப்பாக்கிச் சூட்டில் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என கூறப்பட்ட கோபி
உள்ளிட்ட மூவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் நேற்று இரவு இராணுவத்தினரது சோதனை
நடவடிக்கையின்போது இவர்கள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.
இந்நிலையில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூவரும்
உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய
தெரிவித்தார்.
சுட்டுக் கொலை செய்யப்பட்டவர்களில் கோபி மற்றும் தேவிகன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
எனினும் உயிரிழந்த மூன்றாம் நபர் அப்பனாக இருக்கக் கூடும் என இராணுவத்தினர்
சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தை
தொடர்ந்து அந்த இயக்கத்தினை மீளவும் புத்துயிர் செய்யும்
நடவடிக்கைகளை கோபி மேற்கொண்டு வந்ததாக பொலிஸார் குற்றஞ்சாட்டி
கோபியை தேடி வந்தனர்.
கோபி கஜீபன் பொன்னையா செல்லநாயகம் அல்லது காசியன் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்ததாக பொலிஸார் அறிவித்திருந்தனர்.
கடந்த மாதம் கிளிநொச்சியில் உள்ள வீடொன்றில் கோபி தங்கியிருப்பதாக தகவல்
கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து அங்கு பொலிஸார் சென்றதாகவும் பொலிஸாருக்கும்
கோபிக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் பொலிஸார்
தெரிவித்தனர்.
கோபிக்கு அடைக்களம் கொடுத்த குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த
திருமதி ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் 14 வயதான விபூசிகா கைது
செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கோபியின் தாய் என கூறப்படும் 83 வயதான திருமதி. ராசமலர்
என்பவர் கடந்த மாதம் 24ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை கோபியின் மனைவி என கூறப்படும் இளம் பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டு விசாரணக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது...
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பதவிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலிகள் இயக்கத்தை மீள ஒருங்கிணையச் செய்ய கோபி
முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது,
எனினும், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் இதுவரையில் உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிடவில்லை.

No comments:
Post a Comment