Wednesday, April 30, 2014

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்தை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் திருகோணமலையில் சந்தித்துப் பேச்சு!

Wednesday, April 30, 2014
இலங்கை::கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்தை வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை மாலை திருகோணமலையில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்தார்.
 
இச்சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் பற்றி இரு முதலமைச்சர்களும் சினேகபூர்வமாக கலந்துரையாடினார்கள்.
 
  முக்கியமாக இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றி வந்த அரச ஊழியர்கள் வடக்கு கிழக்கு இரண்டாக பிரிக்கப்பட்ட போது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அரச ஊழியர்கள் வடமாகாணத்திற்கும் வடமாகாணத்தைச் சேர்ந்த அரச ஊழியர்கள் கிழக்கு மாகாணத்திலும் கடமையாற்றி வருகின்றனர்.
 
இவர்களை அவர்களின் சொந்த மாகாணத்திற்கு விடுவிப்பு செய்வது தொடர்பாகவும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது. அத்தோடு யுத்தம் காரணமாக வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை அவர்களது செந்த இடங்களில் குடியமர்த்துவதோடு அவர்களது வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் வடமாகாண முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
 
கடந்த 2006ஆம் ஆண்டு போர்ச்சூழல் காரணமாக திருகோணமலை சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து தற்போது மூதூர், பட்டித்திடல், மணற்சேணை ஆகிய நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களை தான் மாகாண மீள்குடியேற்ற அமைச்சர் என்ற வகையில் மத்திய அரசாங்கத்தின் உதவியுடன் அவர்களது செந்த இடங்களுக்கு விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுத்திருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment