Monday, April 21, 2014

ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்கள் அதன் நோக்கங்களுக்கு அமைவாக நடக்கும் போதே மக்களுக்கு நன்மை- சந்திரகுமார் எம்.பி.!

Monday, April 21, 2014
இலங்கை::
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அதன் நோக்கங்களுக்கு அமைவாக நடக்கின்ற போதே மக்களுக்கு நன்மை கிடைக்கும். மாறாக ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை தங்களுக்குரிய அரசியல் களமாகவும், தீர்மானங்கள், பிரேரணைகள் நிறைவேற்றும் கூட்டமாகவும் பயன்படுத்தினால், அது எவ்விதத்திலும் மக்களுக்கு நன்மை பயக்க போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
 
இன்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வலி. வடக்கில் மக்களின் காணி இராணுவ தேவைக்கு சுவீகரிப்பதனை ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் எல்லோரும் எதிர்த்து கருத்துகள் கூறியிருந்தோம். எங்களின் நோக்கம் அந்த காணிகள் அந்த மக்களுக்கே வழங்கப்பட வேண்டும். அங்கு மக்கள் மீள்குடியேற்ற வேண்டும் என்பதே.
 
இதனை ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றிய கூட்டத்திலும் நாம் தெரிவித்திருக்கின்றோம் எனக்குறிப்பிட்ட அவர், கடந்த ஒன்றரை மாதங்களாக பிரதேச சபைகளின் கீழ் செயற்பட்டு வந்த பொது சுகாதார பரிசோதகர்கள், பணி பகிஷ்கரிப்பில் இருப்பதனால், மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அந்தந்த பிரதேசங்களில் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதனை கண்கானித்து கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
அதாவது, இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படுவதற்கு அனுமதி வழங்கல், உணவகங்களில் ஏற்படும் சுகாதர சீர்கேடுகள், டெங்கு அபாயம், கழிவகற்றல், மற்றும் கட்டிடங்கள் அனுமதி போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் சபைகளுக்குரிய வருமான இழப்பும் ஏற்படுகிறது.
 
எனவே, பொது சுகாதார பரிசோதகர்களின் விடயங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீண்டும் பிரதேச சபைகளின் கீழ் வழக்கம் போன்று செயற்பாடுகளை முன்னெடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும் எனவும் தெரிவித்தார்.
 
மேலும், மாகாண சபைக்கு நிதி கிடைப்பதில்லை என முதலமைச்சர் அவர்கள் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள், கடந்த வரவு செலவு திட்டத்தில் இலங்கையில் உள்ள ஏனைய மாகாண சபைகளை விட வடக்கு மாகாண சபைக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதனையும் சுட்டிக்காட்டியதோடு, இது தொடர்பாக வடக்கு மாகாண நிதிச் செயலாளரிடம் விளக்கம் கோரப்பட்டபோது அவர் கூட்டத்திற்கு சமூகமளித்திருக்கவில்லை.
 
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோரின் இணைதலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சுமந்திரன், சில்வெஸ்டர் அலென்டின், சிறிதரன், விஜயகலா, மாகாண சபை அமைச்சர்களான குருகுலராஜா, ஜங்கரநேசன், டெனிஸ்வரன், சத்தியலிங்கம் மற்றும் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபை தவிசாளர்கள், திணைக்களங்களின் உயரதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment