Tuesday, April 29, 2014

வைகோ ஜெயித்தால் பதவி விலகுவேன்!' : தி.மு.க., "மாஜி' மந்திரி பரபரப்பு சவால்!

Tuesday, April 29, 2014
சென்னை::இந்த தேர்தலில் போட்டியிட்ட தலைவர்கள், முன்னாள் அமைச்சர்களில் யாரெல்லாம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது குறித்து, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் தனித்தனி, "ஹிட் லிஸ்ட்' வைத்துள்ளன. இதில், ஆளும் கட்சியின் பட்டியலில் தான், அதிகம் பேர் இடம் பெற்றுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

வலுவான பொறுப்பாளர்கள் : ம.தி.மு.க., தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி, தே.மு.தி.க., இளைஞரணி நிர்வாகி சுதீஷ், தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, தயாநிதி, ராஜா ஆகியோர், அ.தி.மு.க.,வின், "ஹிட் லிஸ்ட்'டில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, இவர்கள் போட்டியிட்ட தொகுதிகளுக்கு, ஆளும் கட்சியின் சார்பில், வலுவான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதுடன், தேர்தல் பணியும் தீவிரமாக பார்க்கப்பட்டுள்ளது. சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவனை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே, அந்த தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார். கட்சியில் ஓரங்கட்டப்பட்டு இருந்த, செங்கோட்டையன், இதில் வெற்றி பெற்று விட்டால், அவரது அரசியல் எதிர்காலம் மீண்டும் பிரகாசம் அடையும் என, ஆளும் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இப்படி இந்த பட்டியலில் உள்ளவர்களின் தொகுதிகளில், ஆளும் கட்சியால் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி வெற்றி பெற்றால், அந்த தொகுதிகளின் பொறுப்பாளர்கள், நடவடிக்கைக்கு ஆளாகலாம் என, கூறப்படுகிறது.

இதில், தர்மபுரி தொகுதியை பொறுத்த வரையில், அங்கு போட்டியிடும் அன்புமணி மட்டுமல்ல; தி.மு.க., வேட்பாளராக களம் இறங்கியுள்ள தாமரைச்செல்வனும் வீழ்த்தப்பட வேண்டும் என்பது, அ.தி.மு.க.,வின் இலக்கு. அவர், முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், தி.மு.க., சார்பில் ஆஜராகி வருபவர் என்பதால், அவரது பெயரும், "ஹிட் லிஸ்ட்'டில் உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், தி.மு.க.,விலும், சிலரை, தேர்தல் களத்தில் கட்டம் கட்டியுள்ளனர். வைகோ, தம்பிதுரை, அன்புமணி, சுதீஷ் போன்றவர்கள் தோல்வி அடைய வேண்டும் என, தி.மு.க., விரும்புகிறது. அவர்களில் முக்கியமானவர், வைகோ. எந்த விதத்திலும் அவர் ஜெயித்து விடக்கூடாது என, விருதுநகர் மாவட்ட தி.மு.க., செயலரான, சாத்தூர் ராமச்சந்திரனுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டதாக தெரிகிறது. சந்தேகம் எழுந்தது

இதுகுறித்து, அறிவாலய வட்டாரம் கூறியதாவது: விருதுநகர் தொகுதியில், வைகோ போட்டியிட்டார். அவரை எதிர்த்து, தி.மு.க., சார்பில், ரத்தினவேலு நிறுத்தப்பட்டார். அவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டது குறித்து, கட்சியில் விமர்சனங்கள் எழுந்தன. கட்சிக்கு அப்பாற்பட்டவர் என, அழகிரியும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், அவரால் வைகோவை தோற்கடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதுபற்றி பேசுவதற்காக, அந்த மாவட்ட தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரனை, கருணாநிதி அழைத்திருந்தார். தொகுதி நிலவரம் குறித்து, சாத்தூர் ராமச்சந்திரனிடம், கருணாநிதி விசாரித்தார். அப்போது, "விருதுநகரில் வைகோவை தோற்கடிப்போம்; தி.மு.க., வேட்பாளரை ஜெயிக்க வைப்போம். அதில், எந்த சந்தேகமும் வேண்டாம்; ஒருவேளை அவர் ஜெயித்து விட்டால், நான் மாவட்ட செயலர் பதவியில் நீடிக்க மாட்டேன்; உடனடியாக விலகி விடுவேன்' என, சாத்தூர் ராமச்சந்திரன் சூளுரைத்து உள்ளார். இவ்வாறு, அறிவாலய வட்டாரம் தெரிவித்தது.

No comments:

Post a Comment