Tuesday, April 29, 2014

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 05 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்திகளுக்கு 51,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு: திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ்

Tuesday, April 29, 2014
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 05 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்திகளுக்கு 51,000 மில்லியன் ரூபா செலவாகியுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதிக்குரிய ஆவணம் கையளிக்கும் நிகழ்வு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்தர் அழகியல்; கற்கைகள் நிறுவக மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை (28) நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:-

'கடந்த 02 வருடங்களினுள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல நகரங்களை ஒன்றிணைக்கும் 03 பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளன. இதிலொரு பாலமான மண்முனைப்பாலம்; அண்மையில் ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்டது. படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் பாலமாக இம்மண்முனைப்பாலம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான  அபிவிருத்தி வேலைகளுக்காக 618 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 2,500 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு யு.என்.ஹெபிடட் நிறுவனத்தினால் 1,000; வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தை தடுப்பதற்காக உலக வங்கியின் உதவியுடன் அரசாங்கத்தினால் 800 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ்; அணைக்கட்டுக்கள், நீர்ப்பாசனத்திட்டங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

கடந்த வருடம் நடைபெற்ற தெயட்ட கிருள (தேசத்திற்கு மகுடம்) எனும் வேலைத்திட்டத்தின் கீழ் 1,300 மில்லியன் ரூபா நிதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின் ஆலோனையின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் வழிகாட்டலில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் ஏனைய மாவட்டங்களை விடவும் அபிவிருத்திகளைக் கண்டுவருதுடன், இதை மட்டக்களப்புக்கு வரும் சுற்றுலாப்பயணிகளும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மட்டக்களப்பில் சமூகச் சீரழிவுகளும் இடம்பெறுகின்றன.

மது பாவனை மற்றும் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு, பாடசாலை செல்வதில் மாணவர்கள் ஆர்வம் காட்டாமை, சிறுவயது திருமணம், இளவயது கர்ப்பம் இவ்வாறான சமூகச் சீரழிவுகளும் இடம்பெறுகின்றன.

இவைகளை எதிர்காலத்தில் இல்லாமல் செய்து பொருளாதார அபிவிருத்தியை கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
வளமான ஒளிமயமான எதிர்காலத்திற்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டும்' என்றார்.

No comments:

Post a Comment