Friday, April 25, 2014

புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவராக குறிப்பிடப்படும் நெடியவன் பிடிவிராந்து உத்தரவு குறித்து நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை!

Friday, April 25, 2014
இலங்கை::புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இலங்கை அரசாங்கத்தினால் குறிப்பிடப்படும் நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவிராந்து உத்தரவு குறித்து நோர்வே அரசாங்கத்திற்கும், இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
 
சர்வதே காவல்துறையினருடன் இந்த பிடிவிராந்து உத்தரவு குறித்து பேசப்பட உள்ளதாக நோர்வே அரசாங்கம் அறிவித்துள்ளது. நெடியவன் தற்போது நோர்வேயில் வாழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நெடியவன் தமிழீழ விடுதலைப் புலிகளை மீள ஒருங்கிணையச் செய்யும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நெடியவனுக்கு எதிரான பிடிவிராந்து குறித்து இலங்கை அதிகாரிகளுடன் பேசப்பட உள்ளதாக நோர்வே வெளிவிவகார அமைச்சின் ராஜாங்கச் செயலாளர் மோர்டன் ஹூக்லுன்ட் தெரிவித்துள்ளார். நோர்வேக்கான இலங்கைத் தூதுவருடன், பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நெடியவனையும் அவரது தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் இலங்கை அரசாங்கம் தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, 2011ம் ஆண்டு பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் நெடியவனை நோர்வே காவல்துறையினர் கைது செய்து விடுதலை செய்திருந்தனர்.

No comments:

Post a Comment