Tuesday, April 22, 2014
பாரிஸ்::பிரான்ஸ் தலைநகர் பாரிஸ். உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவுர் அமைந்துள்ள மிகப் பெரிய நகரம். உலகின் பல நாடுகளில் இருந்து ஏராளமானோர் இங்கு சுற்றுலா வருகின்றனர். அவர்களுடைய பாதுகாப்பு இப்போது கேள்வி குறியாகி உள்ளது. அதற்கு காரணம் பட்ட பகல் கொள்ளைதான். ருமேனியா, பல்கேரியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து இளைஞர்கள் கொண்ட திருட்டு கும்பல் பாரிசில் குடியேறி உள்ளது.
அவர்கள் பாரிஸ் புறநகர் பகுதியில் முகாமிட்டுள்ளனர். பாரிசில் பிச்சை எடுப்பது, பிக் பாக்கெட் அடிப்பதுதான் இவர்கள் தொழில். இவர்களில் பெரும்பாலும் வாலிபர்கள், இளம்பெண்கள்தான் உள்ளனர்.சுற்றுலா வரும் பயணிகள் வங்கிகள், ஏடிஎம் மையங்களுக்கு செல்வதை பார்த்தால் இந்த கும்பல் அங்கு சூழ்ந்து கொள்ளும். உதவி செய்வது போல் நடித்து பணத்தை பகிரங்கமாக பிடுங்கி கொண்டு சர்வ சாதாரணமாக நடந்து செல்வார்கள். கோடை காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.
அந்த நேரங்களில்தான் திருட்டு கும்பலின் அட்டகாசம் மும்முரமாக நடக்கிறது. சுற்றுலா பயணிகளை அணுகி, உங்களுக்கு இங்கிலீஷ் பேச தெரியுமா? என்று பேச்சை ஆரம்பிக்கின்றனர். அதன்பிறகு சந்தர்ப்பம் பார்த்து பணத்தை பிடுங்கி கொண்டு செல்கின்றனர்.ருமேனியா, பல்கேரியா திருட்டு கும்பலால் பாரிஸ் நகர் செல்லும் சுற்றுலா பயணிகள் பீதி அடைகின்றனர். இவர்கள் உள்ளூர் மக்களிடம் கைவரிசை காட்டுவதில்லை. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எல்லா இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அத்துடன் எல்லா சுற்றுலா தலங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எனினும், ருமேனியா கும்பலின் அட்டகாசம்தான் குறையவில்லை. ஒரு இடத்தில் திருட்டு கும்பலை பிடிப்பதற்குள் வேறு இடத்தில் கைவரிசை காட்டி விடுகின்றனர். திருட்டு கும்பலை முற்றிலும் ஒழிக்க பாரிஸ் நிர்வாகமும் போலீசாரும் படாதபாடு படுகிறது.

No comments:
Post a Comment