Sunday, April 20, 2014

தமிழகம், புதுச்சேரியில் உச்சகட்ட பிரசாரம் ராகுல், அத்வானி நாளை வருகை!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperSunday, April 20, 2014
சென்னை::தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது. இதனால், திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட தலைவர்கள் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜ மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் நாளை தமிழகம் வருகின்றனர். தமிழகம், புதுவையில் வரும் 24ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால், தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வாக்குச்சாவடிகளுக்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு விட்டது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் ரூ.40 கோடிக்கு மேல் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், நாளை மறுநாள் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால், எல்லா தொகுதியிலும் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. வேட்பாளர்களும் தெருத்தெருவாக சென்று ஓட்டு வேட்டையாடி வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் தலைவர்கள் சிதம்பரம், ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன், பாஜ மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

மேலும், பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமிழகத்தில் 3 கட்ட பிரசாரம் மேற்கொண்டார். சென்னை, திருச்சி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுகூட்டங்களில் பாஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, கன்னியாகுமரியில் நடந்த பொது கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, பாஜ மூத்த தலைவர் அத்வானி ஆகியோர் நாளை தமிழகம் வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் நாளை நடைபெறும் பொது கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசருக்கு ஆதரவு திரட்டுகிறார். அத்வானி நாளை வேலூர் மற்றும் தஞ்சாவூரில் நடக்கும் கூட்டங்களில் கலந்து கொண்டு, பாஜ கூட்டணிக்கு ஆதரவு திரட்டுகிறார். சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து பேசுவதற்காக பிரதமர் மன்மோகன்சிங் நாளை மறுநாள் வருகிறார்.  நாளை மறுநாள் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்து விடும். அதன்பின், வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று ஓட்டு வேட்டையாடுவார்கள்.

No comments:

Post a Comment