Saturday, April 26, 2014

பஞ்சாப் மாநிலத்தில் மன்மோகன் சிங் தம்பி பா.ஜ.வில் இணைந்தார் காங்கிரஸ் அதிர்ச்சி!!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

Saturday, April 26, 2014
அமிர்தசரஸ்::மத்தியில் பாஜ தலைமையிலான ஆட்சியே அமையும் என்ற கருத்து கணிப்புகள் பரவியுள்ள நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கின் தம்பி திடீரென பாஜவில் சேர்ந்துள்ளார். இது காங்கிரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் 6 கட்ட வாக்குபதிவுகள் முடிந்து, வரும் 30ம் தேதி 7வது கட்டமாக 89 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, துணை தலைவர் ராகுல் மற்றும் மூத்த தலைவர்கள் காங்கிரசுக்கு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

பாஜவில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் இடைவிடாது ஒவ்வொரு மாநிலமாக சென்று தீவிர பிரசாரம் செய்து வருகிறார். மேலும், மத்தியில் பாஜ தலைமையிலான ஆட்சியே அமையும் என பல்வேறு கருத்து கணிப்புகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கின் தம்பி ஒருவர் திடீரென பாஜவில் இணைந்துள்ளார்.  பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மக்களவை தொகுதியில் பா.ஜ. சார்பாக மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பா.ஜ மற்றும் சிரோன்மணி அகாலி தளம் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அமிர்தசரஸ் நகரில் நேற்றிரவு பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கலந்து கொண்டார். பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒன்று விட்ட சகோதரர் தல்ஜித் சிங் கோஹ்லி, திடீரென மேடையில் தோன்றி மோடி முன்னிலையில் பாஜவில் சேர்ந்தார். அவரை அறிமுகப்படுத்தி மோடி பேசுகையில், ‘பிரதமர் மன்மோகன் சிங்கின் தம்பி பா.ஜ.வில் இணைந்தது, நமது பலத்தை மேலும் அதிகரித்துள்ளது. பாஜவில் உறுப்பினர்களிடையே நட்புறவையும், சகோதர உறவையும் வளர்த்து வருகிறோம்’ என்று கூறினார்.

இதன்பின், தல்ஜித் சிங் கூறுகையில், ‘எனது சகோதரர் மன்மோகன்சிங் மிகவும் நேர்மையானவர். அவர் இந்நாட்டுக்கு முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். ஆனால், அவரை காங்கிரஸ் தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவில்லை. அவரது பணியில் குறுக்கீடு செய்து கொண்டே இருந்ததால், அவரால் சிறப்பாக செயல்பட முடியாமல் போய் விட்டது. இதனால், மனம் வெறுத்து போய் நான் பாஜவில் சேர்ந்திருக்கிறேன்’ என்றார். ‘பாஜ கட்சியில் அனைத்து தரப்பினரையும், அனைத்து இனத்தவர்களையும் அரவணைத்து செல்லக் கூடிய திறமை உடையவர் மோடி. இந்த தேர்தலில் ஜெட்லி வெற்றி பெற்று தேசிய ஜனநாய கூட்டணி அரசில் முக்கிய பங்கு வகிப்பார்’ என்றும் தல்ஜித் சிங் கூறினார்.

பஞ்சாபில் கடந்த 7 ஆண்டுகளாக முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையில் பா.ஜ மற்றும் சிரோன்மணி அகாலி தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாபில் வரும் 30&ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், மன்மோகன் சிங்கின் சகோதரர் பா.ஜ.வில் இணைந்தது, காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இது பற்றி மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவிக்கவில்லை. பிரதமர் மன்மோகனுடன் பிறந்தவர்கள் 6 சகோதரிகள் மட்டும்தான். தல்ஜித் சிங், மன்மோகனின் ஒன்று விட்ட தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment