Monday, April 21, 2014

ஐ.நா. விசாரணைக் குழுவின் நியமனத்தை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாக பான் கீ மூனை, நவநீதம்பிள்ளை சந்திக்கவுள்ளார்!

Monday, April 21, 2014
இலங்கை::இலங்கையில் இடம்பெற்றது என்று கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்காக அமைக்கப்படவுள்ள ஐ.நா. விசாரணைக் குழுவின் நியமனத்தை அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்னதாக ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனை, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சந்திக்கவுள்ளார் என்று தெரியவருகின்றது.

ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகளை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்றது என்று கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான விதிமுறைகளை உருவாக்குவதில் ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகம் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஆயினும் விசாரணைக் குழு மற்றும் அதில் இடம்பெறுவோர் பற்றிய விபரங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.

எனினும், அடுத்தமாதம் எந்த நேரத்திலும் இது தொடர்பான முறைப்படியான அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு முன்னதாக, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்திப்பார் என்று ஜெனிவாவில் உள்ள இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அது தொடர்பாக இலங்கை அரசுக்கு ஜெனிவாவில் உள்ள வதிவிடப் பிரதிநிதி மூலமும் அறிவிக்கப்படும் என்றும் குறித்த கொழும்பு ஆங்கில வார இதழ் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment