Saturday, April 19, 2014

ராமநாதபுரத்தில் மட்டும் ராகுல் பிரசாரம் : சிதம்பரம், வாசன் "அப்செட்!

Saturday, April 19, 2014
சென்னை::தேர்தல் பிரசாரத்திற்கு, தமிழகம் வரப் போவதில்லை என, முடிவெடுத்திருந்த, காங்கிரஸ் துணைத் தலைவர்
ராகுல், ராமநாதபுரம் தொகுதிக்கு மட்டும் வர, திடீரென சம்மதம் தெரிவித்துள்ளதால், கட்சியில் உள்ள மூத்த தலைவர்களான சிதம்பரம், வாசன், தங்கபாலு ஆகியோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
புறக்கணிப்பு:

சிதம்பரத்தின் மகன் கார்த்தி போட்டியிடும் சிவகங்கை, வாசனின் தீவிர ஆதரவாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடும் திருப்பூர், முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு போட்டியிடும் கோவை, மணிசங்கர் அய்யரின் மயிலாடு துறை உள்ளிட்ட எல்லா தொகுதிகளையும் புறக்கணித்து விட்டு, திருநாவுக்கரசர் போட்டியிடும் ராமநாதபுரத்தை மட்டும், ராகுல் தேர்ந்தெடுத்துள்ளார். அதற்கு காரணம், அந்த தொகுதியில் காங்கிரசுக்கு காணப்படும் வெற்றி வாய்ப்பு என, காங்கிரஸ் மேலிடம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த தொகுதியில், ஏற்கனவே பா.ஜ., சார்பில், இவர் போட்டியிட்ட போது, ஒன்றரை லட்சம் ஓட்டுகள் பெற்றுள்ளார். இப்போது, தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., வேட்பாளர்களை எதிர்த்து களம் இறங்கி உள்ளார். தொகுதியில் நிலவும் கடுமையான தண்ணீர் பஞ்சம், ஆளும் கட்சி மீது அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறும் காங்கிரசார், "தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன; தொகுதியில் கணிசமாக உள்ள முக்குலத்தோர் ஓட்டுகளை திருநாவுக்கரசர் கணிசமாக பெறுவார் என்று எதிர்பார்க்கிறோம். எனவே, தமிழகத்தில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதி இது என்பதால் தான், ராகுல் பிரசாரத்திற்கு வர சம்மதித்துள்ளார்' என, விளக்கம் அளித்தனர்.
காங்கிரசுக்கு வெற்றிவாய்ப்பு:

அதேநேரத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா, கடந்த, 16ம் தேதி கன்னியாகுமரியில் பிரசாரம் செய்தார். அவர் வேறு தொகுதிகளுக்கு, வர மறுத்து விட்டார். அதற்கு சொல்லப்பட்ட காரணமும், இதுவாகத் தான் இருந்தது. கன்னியாகுமரியில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, சோனியா அந்த தொகுதிக்கு மட்டும் வர சம்மதித்தார் என்றும், மற்ற தொகுதிகளுக்கு வர விரும்பவில்லை என்றும், காங்கிரஸ் தரப்பில் காரணம் கூறப்பட்டது.

இதுகுறித்து, தமிழக காங்கிரசார் மேலும் கூறியதாவது:
 
தமிழகத்தில், காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டாலும், களத்தில் மற்ற கட்சிகளுக்கு இணையாக வேலை நடப்பதும், வெற்றி வாய்ப்பு இருப்பதும் ஐந்து தொகுதிகளில் தான் என்பது எங்கள் கணிப்பு. அதில், கன்னியாகுமரியும், ராமநாதபுரமும் முக்கியமானவை.மற்றபடி தேனி, அரக்கோணம், சிவகங்கை ஆகிய தொகுதிகளில், காங்கிரஸ் கடும் போட்டியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி, வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டாலும் கூட, இரண்டாவது இடத்தைப் பிடித்து விடும் என்று நம்புகிறோம்.கட்சி மீது விமர்சனம்நிலைமை இப்படி இருக்கையில், சோனியாவும், ராகுலும் ஒரு தொகுதிக்கு மட்டும் பிரசாரம் செய்வதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. சிதம்பரம், வாசன், தங்கபாலு போன்றவர்களை வேண்டுமென்றே, சோனியாவும், ராகுலும் புறக்கணித்துள்ளனர் என்பது தான் உண்மை. அவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டது தான், மேலிடத்தின் அதிருப்திக்கு காரணம். சிதம்பரம் போன்றவர்கள் போட்டியிடாதது, தேசிய அளவில் காங்கிரஸ் மீது விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

அந்த கோபத்தில் தான், மற்ற தொகுதிகளை சோனியாவும், ராகுலும் புறக்கணித்தனர். ஆனால், இதை புரிந்து கொள்ளாமல், ராமநாதபுரத்திற்கு மட்டும் ராகுல் வருவதால், சிதம்பரம், வாசன் போன்ற தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.தாங்கள் விரும்பும் தொகுதிகளுக்கு வராமல், கன்னியாகுமரிக்கு மட்டும் வந்ததால், சோனியா கூட்டத்திற்கு கூட இவர்கள் வரவில்லை. 21ம் தேதி ராமநாதபுரம் வரும், ராகுல் பிரசாரத்திற்கும் இவர்கள் வருவரா என்பது தெரியவில்லை.இவ்வாறு, காங்கிரசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment