Sunday, April 20, 2014

இலங்கையில் அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் - மத்திய வங்கி அறிக்கை!

இலங்கையில் அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் - மத்திய வங்கி அறிக்கை
 Sunday, April 20, 2014
இலங்கை::இலங்கையில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருப்பதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5ஆம் தரம் முதல் 9ஆம் தரம் வரை படித்தவர்கள் மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் வரை மாத்திரம் படித்துள்ள இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்புக்களின்றி பாதிக்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேநேரம் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தையும் கடந்து மேல் படிப்பு படித்தவர்கள் மத்தியில் காணப்படுகின்ற தொழில் வாய்ப்பில்லாத பிரச்சினையானது மிகவும் பாரதூரமானது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக நாட்டின் தொழில் வர்த்தக சந்தைக்கு ஏற்ற வகையில் தற்போதைய உயர் கல்வியை மாற்றியமைக்க வேண்டும் என்றும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியிருக்கிறது. 
 
 இந்த வேலையில்லா திண்டாட்டம் பற்றி கருத்து வெளியிட்ட யாழ் பல்கலைக்கழக சமூகவியல் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளராகிய இராஜேஸ்வரன் இராஜேஸ்கண்ணன், இன்றைய இளைஞர்கள் தமக்குப் பொருத்தமான வேலைகளைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள் என குறிப்பிட்டார். அத்துடன் தமது கல்வித் தராதரத்திற்கும் அவரவர் துறைசார்ந்த வகையிலும் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாகவும் இளைஞர்கள் இருப்பதாகவும், இதனால், சில வேளைகளில் பலர் கீழுழைப்பாளர்களாக மாறியிருப்பதாகவும் அவர் கூறுகிறார். இன்னுமொரு பிரிவினர் எந்தவிதமான தொழிலையும் பெற்றுக்கொள்ள முடியாமல் பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு வேலைவாய்ப்புக்காகத் தமது பெயர்களைப் பதிவு செய்துவிட்டு வேலையில்லாமல் இருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மற்றுமொரு பிரிவினராக கல்விப் பொதுத் தராதரம் அல்லது கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பு வரையிலும் படித்துவிட்டு மேல் படிப்பைத் தொடரமுடியாமல் கல்வியில் இருந்து இடைவிலகியவர்கள் தொழில் வாய்ப்பின்றி, கல்விக்குள்ளேயும் இல்லாமல் தொழில் வாய்ப்புக்குள்ளேயும் இல்லாமல் பெருமளவிலான இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்களுடைய பிரச்சினை இன்று பூதாகரமான பிரச்சினையாகியிருக்கின்றது" என்றார் யாழ் பல்கலைக்கழக சமூகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் இராஜேஸ்கண்ணன். இளைஞர்களை தொழில்துறைக்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றுவதற்காக அரசாங்கம் தொழில் முயற்சிவாண்மைக்கான அதிகார சபையின் ஊடாக பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது. இருப்பினும், இவ்வாறு பயிற்றப்பட்ட இளைஞர்கள் அந்தப் பயிற்சியைப் பயன்படுத்தி தமக்கென நிரந்தரமான தொழில்வாய்ப்புகளைப் பெற முடியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment