Friday, April 18, 2014
நாகர்கோவில்: தமிழக மீனவர் பிரச்னையில், 'அம்மா' ஜெயலலிதா, 'மேடம்'
சோனியாவையும்; மேடம், அம்மாவையும் குறை கூறுகின்றனர். இவர்கள் சண்டை
போட்டுக் கொண்டிருக்க, மீனவர்கள் செத்து சுண்ணாம்பு ஆகிக்
கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் மாற்றம் ஏற்படுவதற்கான காற்று, வேகமாக
அடிக்கிறது,'' என, கன்னியாகுமரியில் மோடி கூறினார்.
கன்னியாகுமரி
அருகே, அகஸ்தீஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், மோடி பேசியதாவது:
கன்னியாகுமரி, தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டு மொத்த கருத்தின்
உறைவிடமாக உள்ளது. கற்களில் சிலை அமைப்போர், நெசவாளர்கள் நிறைந்த
மாவட்டம், கன்னியாகுமரி. கடல் நடுவில் திருவள்ளுவர் சிலை, சுவாமி
விவேகானந்தர் தவம் செய்த பூமி. சூரியன் உதிப்பதையும், மறைவதையும் இங்கே
தான் காண முடியும்.
மாற்று அரசு தேவை:
இந்த
மாவட்டத்துக்கு, இரட்டை ரயில் பாதை அமைத்து, சுற்றுலாவை வளர்ச்சி பெறச்
செய்தால், ஒரு இளைஞர் கூட, வேலை தேடி வெளியூர் செல்ல வேண்டி இருக்காது.
பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும். ஆனால், இதைப்பற்றி தமிழக அரசும்,
டில்லி அரசும் கவலை கொள்ளவில்லை. தமிழகத்திற்கு, இப்போது ஒரு மாறுதல் தேவை.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, கிராமங்கள் தோறும் குடிநீர், சாலை, மின்சார
வசதிகள் செய்யக்கூடிய மாற்று அரசு தேவை. அதற்காகத் தான் வைகோ, விஜயகாந்த்,
ராமதாஸ், பொன்.ராதாகிருஷ்ணன் கொண்ட, பலமான கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தேர்தல், மத்திய அரசுக்கான தேர்தல் என்பதை, மக்கள் உணர வேண்டும் என,
மன்றாடி கேட்கிறேன். மத்தியில், வலுவான ஒரு அரசு தேவை; அதற்கு, தமிழக
மக்களின் வலுவான கரங்கள் தேவைப்படுகின்றன.
மத்திய அரசின் தூக்கம்:
'மீனவர்களுக்காக
காங்., அரசு பாடுபட்டது' என, சோனியா நேற்று இங்கு பேசியுள்ளார். தமிழக
மீனவர்களை, இலங்கை கடற்படையினர் அடித்து துன்புறுத்தி, சிறைபிடித்த போது,
மத்திய அரசு தூங்கிக் கொண்டிருந்தது. தமிழக மீனவர் பிரச்னையில், 'அம்மா'
ஜெயலலிதா, மேடம் சோனியாவையும்; மேடம், அம்மாவையும் குறை கூறுகின்றனர்.
இவர்கள், சண்டை போட்டுக் கொண்டிருக்க, மீனவர்கள் செத்து சுண்ணாம்பு ஆகிக்
கொண்டிருக்கின்றனர். மீன்பிடி தொழிலில், விஞ்ஞானத்தையும், தொழில்
நுட்பத்தையும் புகுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
அதிகளவு கூட்டத்தால் உற்சாகம்:
கன்னியாகுமரி
முருகன் குன்றம் மைதானத்தில், நேற்று முன்தினம் சோனியா பேசினார். அதே
இடத்தில் நேற்று நரேந்திர மோடி பேசினார். அவர், இந்தியில் பேசியதை,
'தூர்தர்ஷன்' முன்னாள் செய்தி ஆசிரியர் எச்.ராமகிருஷ்ணன் மொழி பெயர்த்தார்.
மோடி, பிரசார மேடைக்கு மதியம், 2:55 மணிக்கு வந்தார். 3:00 மணிக்கு
பேசத்துவங்கி, 3:40க்கு முடித்தார். அவர், இந்தியில் பேசினாலும்,
மக்களுக்கு புரியும்படி சைகை காட்டியும், ஆக்ரோஷமாகவும் பேசி கவர்ந்தார்.
எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகளவு வந்ததால், மோடி பரவசமடைந்து
எழுச்சியுடனும், உணர்ச்சிப்பூர்வமாகவும் பேசினார். மக்கள் எழுந்து நின்று
ஆரவாரம் செய்தனர்.

No comments:
Post a Comment