Sunday, April 20, 2014

தென்னாபிரிக்க விஜயத்தினால் ஏற்பட்டுள்ள ஏமாற்றம் காரணமாக கூட்டமைப்பின் தலைமையில் ஏற்பட்டுள்ள இம்மாற்றத்தின் முடிவுகள்!!

Sunday, April 20, 2014
இலங்கை::பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்று இனப்பிரச்சினைக்கான தீர்வினை விரைவாகக் காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கட்சிக்குள்ளும், வெளியேயும் கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இதன் காரணமாக இவ்விடயத்தில் இதுவரை பிடிவாதப் போக்கிலிருந்த தமிழ்க் கூட்டமைப்பு அதன் போக்கில் நெகிழ்வுப் போக்கான நிலையை எடுத்துள்ளது.
தென்னாபிரிக்க விஜயத்தினால் ஏற்பட்டுள்ள ஏமாற்றம் காரணமாக கூட்டமைப்பின் தலைமையில் ஏற்பட்டுள்ள இம்மாற்றத்தின் முடிவுகள் அடுத்த வாரங்களில் வெளிப்படுத்தப்படலாம் என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாண சபைகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத் திலும் இது தொடர்பாக கருத்துப்பரிமாறல்களைக் காணக்கூடியதாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் காலத்தை வீணடித்துச் செல்வதனால் உள்ளூரில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டு மக்களது இயல்பு வாழ்வு பாதிக்கப்படுவதாக தமக்கு வாக்களித்த மக்கள் சுட்டிக்காட்டுவதாக கூட்டமைப்பின் பிராந்தியத் தலைவர்கள் அதன் தலைமையிடம் தெரிவித்துள்ளனர். இந்தியா உட்பட சர்வதேசம் எமது பிரச்சினைகளை கைவிடத் தொடங்கியுள்ள நிலையில், இனியும் வெளிநாடுகளுக்குச் சென்று வருவதில் அர்த்தமில்லை எனவும் மக்கள் சுட்டிக்காட்டத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் அரசாங்கம் தெரிவித்து வருவது போன்று பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து அதனூடாகப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே சிறந்தது எனத் தமிழ் மக்களும், தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள பல அரசியல்வாதிகளும் கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இணையும் தீர்மானத்தை எடுக்க வேண்டியதொரு சூழ்நிலைக்கு தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அழைப்பை ஏற்றுத் தாம் தெரிவுக் குழுவில் பங்கேற்கச் சம்மதத்தை தெரிவிக்கவுள்ளதாகவும் கட்சியின் நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment