Wednesday, April 16, 2014
புதுடெல்லி: தேர்தலில் நான் போட்டியிட விரும்பினால் யாராலும் தடுக்க முடியாது என்றார் பிரியங்கா காந்தி. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி. இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிட்டதில்லை. இந்நிலையில் உ.பி.மாநிலம் வாரணாசியில் பாஜ பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை எதிர்த்து போட்டியிட பிரியங்கா விரும்பியதாகவும், சோனியா காந்தி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் கடந்த வாரம் செய்திகள் வெளியாயின. இதனை பிரியங்கா காந்தி மறுத்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:நான் தோதலில் போட்டியிட வேண்டும் என்பது ராகுல் காந்தியின் விருப்பம். இதை அவர் பல முறை என்னிடம் தெரிவித்துள்ளார். ஆனால் சொந்த காரணங்களுக்காக நான் தேர்தலில் நிற்க விரும்பவில்லை. சோனியா மற்றும் ராகுல் தொகுதியில் பிரசாரம் செய்வதில் மட்டும் தற்போது கவனம் செலுத்தி வருகிறேன். வாரணாசியில் மோடிக்கு எதிராக போட்டியிட விரும்பியதாகவும், அதனை சோனியாவும், ராகுலும் தடுத்துவிட்டதாகவும் வெளியான செய்திகளில் துளி கூட உண்மையில்லை.
நான் தேர்தலில் போட்டியிட விரும்பினால் அதை எனது குடும்பத்தினர் உள்பட யாராலும் தடுக்க முடியாது. அனைவரும் எனது விருப்பத்துக்கு முழு ஆதரவு அளிப்பார்கள். அரசியலில் நேரடியாக பங்கேற்க வேண்டும் என உள்மனது கூறினால் அப்போது அரசியலுக்கு வருவேன். இவ்வாறு பிரியங்கா கூறினார்.

No comments:
Post a Comment