Sunday, April 20, 2014

தடைசெய்யப்பட்ட அமைப்புக்களைச் சேர்ந்தோரை கைது செய்ய உலக நாடுகளிடம் கோரிக்கை: இராஜதந்திரிகைளை சந்திக்கிறார் பீரிஸ்!

Sunday, April 20, 2014
இலங்கை::தடைசெய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்களையும், அனைத்துலக காவல்துறையால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளவர்களையும் கைது செய்ய உதவும் படி அனைத்துலக சமூகத்திடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுக்கவுள்ளது.
 
அடுத்தவாரம் கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் வெளிவிவகார அமைச்சர் நடத்தவுள்ள சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாக, அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வரும் வியாழக்கிழமை காலை வெளிநாட்டு இராஜதந்திரிகளை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் சந்தித்துப் பேசவுள்ளார்.
 
இதன்போது, இலங்கை அரசாங்கத்தினால், வெளியிடப்பட்டுள்ள 16 அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்கள் மீதான தடை அறிவிப்பு குறித்து அவர் விளக்கமளிக்கவுள்ளார்.
 
இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள நபர்களையும், அனைத்துலக காவல்துறை மூலம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 40 பேரையும் எங்குள்ளனர் என்று தேடிப்பிடித்து, இலங்கைக்கு கொண்டு வருவதற்கு உதவும் படி, இந்தக் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை விடுக்கவுள்ளார்.
 
கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ளும் உடன்பாடு நடைமுறையில் இல்லாத நாடுகளும் கூட பயனுள்ள விதத்தில் ஒத்துழைப்பு வழங்க முடியும் என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரியான சாதிக் தெரிவித்துள்ளார்.
 
குறிப்பாக, ஈரானுடன் கைதிகள் பரிமாற்ற உடன்பாட்டை இலங்கை செய்து கொள்ளாதபோதிலும், ஈரானில் கைது செய்யப்பட்ட நந்தகோபன், மலேசியாவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment