Friday, April 18, 2014

2013ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படி நுவரெலியா மற்றும் வன்னி மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகை தலா ஒன்றினால் அதிகரிப்பு!

Friday, April 18, 2014
இலங்கை::2013ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படி நுவரெலியா மற்றும் வன்னி மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகை தலா ஒன்றினால் அதிகரித்துள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.
இது தவிர குருநாகல் மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு ஒதுக்கப்படும் உறுப்பினர் தொகை தலா ஒன்றினால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி தேர்தல் ஆணையாளர் மொஹமட் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்திலிருந்து ஆறு உறுப்பினர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.
 
2013ம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பின்படி, 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் தேர்வு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
 
இதன்படி நுவரெலியாவில் இருந்து தேர்வாகும் உறுப்பினர் தொகை பதிவு செய்யப்பட்ட வாக்காளர் இடாப்பின் படி 7 இல் இருந்து எட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வன்னியில் இருந்து தேர்வாகும் உறுப்பினர் தொகை 5 இல் இருந்து 6 ஆகவும் உயர்ந்துள்ளது. இது தவிர, மாத்தறையில் இருந்து தேர்வு செய்யப்படும் உறுப்பினர் தொகை 8 இல் இருந்து 7 ஆகவும், குருநாகல் மாவட்டத்தில் இருந்து தேர்வு செய்யப்படும் தொகை 16 இல் இருந்து 15 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
 
புதிய வர்த்தமானி அறிவித்தலின் படி, கொழும்பில் 19, கம்பஹா 18, களுத்துறை 10, கண்டி 12, மாத்தளை 5, காலியில் 10, ஹம்பாந்தோட்டையில் 7, யாழ்ப்பாணம் 6, மட்டக்களப்பு 5, திகாமடுல்ல 7 திருகோணமலை 4 புத்தளத்திலிருந்து 8 பேரும் அநுராதபுரம் 9, பொலன்னருவை 5, பதுளை 9, மொணராகலை 6, இரத்தினபுரி 11, கேகாலை 9, பேரும் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
 
2012 வாக்காளர் இடாப்புப் படியும் மேற்குறிப்பிட்ட இந்த மாவட்டங்களில் இருந்து இதே அளவு உறுப்பினர்களே தேர்வாகுவதாக அறிவிக்கப்பட்டன. பாராளுமன்றத்துக்கு மொத்தமாக 225 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவற்றில் தேர்தல் மூலம் 196 பேர் தேர்வாகின்றனர்.
 
29 பேர் தேசிய பட்டியலிலிருந்து கட்சிகளால் நியமிக்கப்படுவர். 1988 விசேட வர்த்தமானியின் படி 36 உறுப்பினர்கள் தலா 4 பேர் வீதம், 9 மாகாணங்களுக்கும் பிரித்து வழங்கப்படுவதோடு, எஞ்சிய 160 உறுப்பினர்களும் வாக்காளர் இடாப்பிலுள்ள சனத்தொகை விகிதப்படி பிரித்து வழங்கப்படுவதாக பிரதி தேர்தல் ஆணையாளர் மொஹமட் தெரிவித்தார்.

No comments:

Post a Comment