Thursday, March 6, 2014

நவநீதம் பிள்ளையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை இலங்கை நிராகரிக்கின்றது: ஜீ. எல். பீரிஸ் ஜெனீவாவில்!

Thursday, March 06, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை இலங்கை நிராகரிக்கின்றது என வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் ஜெனீவாவில் தெரிவித்தார்.
 
சில நாடுகளின் சுயநலனுக்காக மனித உரிமைகள் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டாலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடனான நெருக்கமான உறவை இலங்கை தொடர்ந்து பேணிவரும் எனவும் அமைச்சர் ஜீ. எல்.பீரிஸ் தெரி வித்தார்.
 
ஜெனீவா மனித உரிமைகள் பேர வையின் 25வது அமர்வில் நேற்று நடைபெற்ற உயர் மட்டக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற் கண்டவாறு கூறி யுள்ளார். தொடர்ந் தும் உரையாற்றிய அவர், உலகின் பல நாடுகளில் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்படவேண் டியிருக்கும் சூழ்நிலையில், குறிப்பிட்ட சில நாடுகளுக்கு எதிராக மாத்திரம் மனித உரிமைகள் கவுன்சில் நடவடிக்கை எடுத்து வருவதானது பாரபட்சமாக அமைந்துள்ளது.
 
மனித உரிமைகள் சுயநல நோக்கத்துடன் அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத் தப்படுகிறது. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக இவ்வாறானதொரு நிலை தொடர்ந்து காணப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறான நடவடிக்கையானது மனித உரிமைகள் பேரவையில் உயரிய நோக்கத்துக்கு எதிர்மறையானதாக அமைந்துள்ளது. இது நிறுத்தப்பட வேண்டும்.
 
மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் சில நாடுகளின் கட்டளைக்கு அமையவே எமது நாட்டுக்கு எதிரான இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. இலங்கையின் அனுமதியின்றியே இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்கின்றன. இருந்தபோதும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கை நெருக்கமான தொடர்பைத் தொடர்ந்தும் பேணும்.
இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் எமது குழு தொடர்ந்தும் விரிவாக விளக்கமளித்து வந்துள்ளது. இருந்தபோதும், சில தரப்பினரின் நலனுக்காக இவ்விடயம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகியுள்ளது. கடந்த 12 மாதங்களாக நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தொடர்ச்சியான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய உருவாக்கப்பட்ட தேசிய செயற்றிட்டம் கடந்த 19 மாதங்களாக அமுல்படுத் தப்பட்டுள்ளது.
 
அதேநேரம், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் மனித உரிமைகள், காணி கையளித்தல் மற்றும் மீள்குடியேற்றம், நஷ்டஈடு வழங்கல் மற்றும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தல், நல்லிணக்கம் போன்ற ஐந்து முக்கிய தொனிப்பொருட்களின் கீழ் அமுல்படுத்தி வருகிறது. ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் இதனைக் கண்காணிப்பதற்கு அமைச்சுக்களுக்கிடையிலான செயலணிக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
 
30 வருட நீண்டகால பயங்கரவாதத்திலிருந்து மீண்ட நாட்டில் இலங்கை சிறந்ததொரு இலக்கை எட்டியுள்ளது என்பதை பார்வையாளர் நாடுகள் ஏற்றுக்கொள்ளும். யுத்தத்தின் பின்னர் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
 
காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. இது வடக்கில் சாட்சியங்களைப் பதிவுசெய்திருப்பதுடன், கிழக்கு மாகாணத்திலும் சாட்சியங்களைப் பதிவுசெய்வதற்கு இது நடவடிக்கை எடுத்துள்ளது. 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12ஆம் திகதி வரை இந்த ஆணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் விடயத்தில் அரசாங்கம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதுடன், தொழில்நுட்ப உதவிகளையும் பெற்றுள்ளது.
 
அதேநேரம், 1982ஆம் ஆண்டு முதல் இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள், சொத்துக்கள் மற்றும் உயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுப்பொன்றும் நடத்தப்படவுள்ளது. இதற்காக அரசாங்கம் கடந்த ஜனவரி மாதம் 150 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளது.
இறுதிக்கட்ட நடவடிக்கையின் போது பொதுமக்களுக்கு இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட இராணுவ விசாரணைக் குழு முதற்கட்ட விசாரணைகளை பூர்த்திசெய்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இரண்டாம் கட்ட விசாரணைகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன.
 
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்குவதற்காக அரசாங்கம் 2010ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 392 மில்லியன் ரூபாய்களும், 2013ஆம் ஆண்டில் 204 மில்லியன் ரூபாய்களும் ஒதுக்கியிருந்தது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிரைவேற்றுவதற்காக 2014ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் 475 மில்லியன் ரூபாய்களை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
 
இலங்கையின் வடபகுதியில் இனப்பாகுபாட்டை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லை. வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு செய்யவில்லை. யுத்தத்திற்கு முன்னர் வடக்கில் 75,000 முஸ்லிம்களும், 35,000 சிங்களவர்களும் வாழ்ந்துவந்தனர். தற்போது கொழும்பில் சிங்களவர்கள் அல்லாத 35 வீதமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஒரு இனத்திற்கென்று ஒரு பகுதியை ஒதுக்க அரசாங்கம் தயாராகவில்லை.
 
அதேநேரம், வடக்கில் இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த பல காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. உயர்பாதுகாப்பு வலயங்களும் பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளன. இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் இறுதித் தீர்வை எட்டும் நோக்கில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தே இந்தத் தெரிவுக்குழுவுக்கான விதிமுறைகள் தயாரிக்கப்பட்டன. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இந்தத் தெரிவுக்குழுவில் பங்குபெறாமல் இருப்பது துரதிஸ்டவசமானது. இருந்தபோதும் இது இறுதித் தீர்வைப் பெறுவதற்கு தடையாக உள்ளது என்றார்.

No comments:

Post a Comment