Wednesday, March 19, 2014

தேர்தல் ஆணையர் பெயர்கூட தெரியாத விஜயகாந்த்!

Wednesday, March 19, 2014
ஊட்டி::மாநில தலைமை தேர்தல் ஆணையர் பெயரைக்கூட தெரியாத தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் என்று ஊட்டியில் பொதுமக்கள் கிண்டல் அடித்தனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஊட்டி ஏ.டி.சி.,திடலில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:_

ஊழலின் உச்சத்தில் ஊட்டி உள்ளது. ஏனென்றால் 2 ஜி ஸ்பெக்டர் ஊழலில் ஒன்றரை ஆண்டுகாலம் திஹார் சிறையில் இருந்தவர் உங்கள் தொகுதி எம்.பி.,ஆ.ராசா. அவருக்கு தி.மு.க.,வில் இதே நீலகிரி தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ராசாவிற்கு வாக்களித்தீர்கள் என்றால் நீலகிரி தொகுதி மக்களும் ஊழலுக்கு துணை போகின்றனர் என்று கூறுவார்கள். தலைவன் எவ்வழியோ அவ்வழிதான் தொண்டனும் இருப்பான். அதேபோல் தி.மு.க.,தலைவர் கலைஞர் வழியில் தான் ராசாவும் இருக்கிறார். இந்தியா முழுவதும் ஊழலை ஒழிக்க நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும். நீலகிரி தொகுதி யாருக்கு என்று இன்று(நேற்று) மாலைக்குள் தெரிந்து விடும். எனக்கு சினிமாவில் நடிக்கத்தெரியும். ஆனால் நேரில் நடிக்கத்தெரியாது. கோபம் இருக்கும் இடத்திலே தான் குணம் இருக்கும். எனக்கு கோபம் இருந்தால் நான் கூட்டணி பற்றி சொல்லி இருப்பேனே என்றார்.( அப்போது ஒரு தொண்டன் குறிப்பிட்டு ஏதோ சொல்லமுயல அதற்கு விஜயகாந்த் பேசாமல் இருக்கிறாயா, அல்லது அங்கு நான் வரட்டுமா என்று அந்த தொண்டனை சப்தம் போட்டார்.)

தமிழக தேர்தல் அதிகாரி பிரேம் குமார் அரசு ஊழியர்கள் அரசுக்கு சாதகமாக செயல்படுவதை கண்டுக்காமல் இருக்கிறார். நான் தி.மு.க.,விடம் பெட்டியை வாங்கிவிட்டேன் என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் நாங்கள் அல்லவா மாநிலங்களவை உறுப்பினராகியிருப்போம். ஏன் திருச்சி சிவா எம்.பி.,யாகியிருக்கிறார். 13 இடைத்தேர்தல்களை தனியாக சந்தித்து இருக்கிறேன். அத்துடன் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனியாக நின்று எனது கட்சியின் வாக்கு சதவீதத்தை நிறுபித்துள்ளேன். குஜராத்தில் 3_வது முறையாக முதல்வராக பதவிவகித்து வரும் மோடியை ஆதரிக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றார்.

இந்த நிலையில் கூட்டத்தில் இருந்த விவரம் தெரிந்தவர்கள் சிலர் கூறுகையில், கூட்டணியில் யார் தொகுதியில் இருக்கிறார்கள் என்பதே தெரியாத நிலையில் வாக்கு சேகரிக்க வந்திருக்கும் தே.மு.தி.க.,தலைவர் விஜயகாந்த், மாநில தேர்தல் ஆணையர் பெயரையே பிரவீண் குமார் என்பதற்குப்பதிலாக பிரேம் குமார் என்று கூறுகிறார். இவர் எப்படி ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கிறார் என்று கிண்டல் அடித்ததை கேட்கமுடிந்தது.

கூட்டத்தில் தே.மு.தி.க.,மாவட்ட செயலாளர் சாந்திராமு உட்பட பா.ஜ.க.,ம.தி.மு.க.,ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment