Thursday, March 13, 2014

முதல்வர் ஜெயலலிதா இன்று ஈரோடு - திருப்பூரில் பிரசாரம்!

Thursday, March 13, 2014
சென்னை::ஈரோடு,திருப்பூர் பாராளுமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா இன்று பிரசாரம் செய்கிறார். 
பாராளுமன்ற தேர்தல் 9 கட்டமாக நடக்கிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 24-ம் தேதி ஒரே கட்டமாக 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் நடைபெறுகிறது. இந்த 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் அ.தி.மு.க.வேட்பாளர்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன் பின்னர் அ.தி.மு.க. சார்பாக தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார். அதோடு மட்டுமல்லாது முதல் கட்ட பிரசாரத்தையும் தொடங்கினார். கடந்த 3-ம் தேதி காஞ்சிபுரத்தில் இருந்து ஜெயலலிதா தனது முதல் பிரசாரத்தை தொடங்கினார். காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
 
அதனையடுத்து ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் கே.என்.ராமச்சந்திரன், நாகை தனித்தொகுதியில் போட்டியிடும் டாக்டர் கோபால், மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் பாரதி மோகன் ஆகியோரை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா தீவிர பிரசாரம் செய்து மக்களிடத்தில் ஆதரவு திரட்டினார். ஜெயலலிதா சென்ற இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. முதல்வர் ஜெயலலிதா தனது பிரசாரத்தின்போது தன் தலைமையிலான அ.தி.மு.க. அரசின் சாதனைகளை மக்களிடத்தில் விளக்கி அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்து மத்தியில் தமிழகம் பங்கேற்கும் அரசை அமைக்க உதவும்படி கேட்டுக்கொண்டார். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசின் ஊழலையும் தமிழக மக்களுக்கு தி.மு.க.வும் அந்த கட்சியின் தலைவர் கருணாநிதியும் துரோகம் இழைத்ததையும் மக்களிடம் ஜெயலலிதா எடுத்துரைத்தார். 
இந்தநிலையில் கன்னியாகுமரி தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளர் ஜான்தங்கத்தை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார். மேலும் கடந்த 11-ம் தேதி  சிதம்பரம் தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார். சிதம்பரம் பைபாஸ் சாலையில் அ.தி.மு.க.சார்பாக போட்டியிடும் சந்திரகாசியை ஆதரித்து ஜெயலலிதா  பிரசாரம் செய்தார். சிதமப்ரம் தனித்தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. சிதம்பரம் தொகுதியில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு அன்று இரவே சென்னைக்கு ஜெயலலிதா திரும்பினார்.
ஒருநாள் ஓய்வுக்கு பின்னர் முதல்வர் ஜெயலலிதா இன்று ஈரோடு மற்றும் திருப்பூர் பாராளுமன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்கிறார். ஈரோடு தொகுதியில் அதாவது காங்கேயம் 4 ரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். பிறகு திருப்பூர் செல்லும் அவர் அங்கு பெருமாநல்லூர் சாலையில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். பிறகு வரும் 15-ம் தேதி (சனிக்கிழமை) தூத்துக்குடியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.  

No comments:

Post a Comment