Saturday, March 8, 2014

ரஷ்யாவுடன் இணைய ஆதரவு: அமெரிக்கா கடும் எதிர்ப்பு!

Saturday, March 08, 2014
மாஸ்கோ::ரஷ்ய கூட்டமைப்பில் இணைய உக்ரைனின் தன்னாட்சி பிராந்தியமான கிரீமியா நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் முழு மனதாக ஆதரவு தெரிவித்தனர். இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். 
 
சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து உக்ரைன் தனி நாடானது. அதிபர் விக்டர் யனுகோவிச் ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தக உறவை முறித்துக் கொண்டு ரஷ்யாவுக்கு ஆதரவான முடிவை எடுத்தார். 
இதை கண்டித்து எதிர்க்கட்சியினர் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நெருக்கடி முற்றிய நிலையில் விக்டர் யனுகோவிச் தலைமறைவானார். 
இந்நிலையில், உக்ரைனின் தென் கிழக்கு பகுதியில் உள்ள கிரீமியா மக்கள் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து உள்ளனர். 
அதற்கேற்ப ரஷ்ய படைகளை கிரீமியாவில் அதிபர் புடின் குவித்தார். இதற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் கடும் கண்டனம் தெரிவித்தது. 
இதையடுத்து படைகள் வாபஸ் பெறப்பட்டன. இந்நிலையில் ரஷ்யாவுடன் கிரீமியாவை இணைக்க கிரீமியா நாடாளுமன்றத்தில் நேற்று முன்  தினம் எம்.பி. க்கள் ஓட்டளித்தனர். 
இது தொடர்பாக மக்களிடையே வரும் 16 _ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும் எ ன்று அறிவிக்கப்பட்டது. 
கிரீமியாவில் பெரும்பாலான மக்கள் ரஷ்ய மொழி பேசுபவர்கள். அவர்கள் ரஷ்யாவுடன் இணைய ஆதரவு தெரிவிக்கின்றனர். 
இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். ரஷ்யாவுடன் இணையும் முடிவு கிரீமியா சட்டப்படியும், சர்வதேச சட்டப்படியும் தவறானது என்று ஒபாமா தெரிவித்துள்ளார். 
மேலும் உக்ரைன் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ரஷ்யர்களின் விசாவை முடக்கவும், சொத்துக்களை முடக்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதனால் ரஷ்ய _ அமெரிக்க உறவில் சிக்கல் பெரிதாகி உள்ளது.

No comments:

Post a Comment