Monday, March 31, 2014

ஐக்கிய தேசியக் கட்சியின் பாரிய வீழ்ச்சியை இந்த இரு மாகாணங்களுக் குமான தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது: தினேஷ் குணவர்தன!

Monday, March 31, 2014
இலங்கை::ஐக்கிய தேசியக் கட்சியின் பாரிய வீழ்ச்சியை இந்த இரு மாகாணங்களுக் குமான தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
 
அதேவேளை எதிர்க் கட்சிகள் தொடர்பில் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியையும் இந்த தேர்தல் முடிவுகள் மூலம் தெளிவாக உணர்ந்துகொள்ள முடிந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
 
அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள அமோக வெற்றியாக இத் தேர்தல் வெற்றியைக் கருத முடியும் என தெரிவித்த அமைச்சர் அனைத்து மாவட்டங்களிலும் அமோக வெற்றியினை ஈட்டிக்கொள்ள முடிந்துள்ளதுடன் மாவட்ட மட்டத்தில் முன்பிருந்ததைவிட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதையும் அதேவேளை, பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு முன்பிருந்த மக்கள் ஆதரவு இல்லாமற் போயுள்ளதையும் காண முடிகின்றது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
 
பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி:
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி காலி மாவட்டத்தில் பாரிய வெற்றியை ஈட்டிக் கொண்டுள்ளது. காலி தேர்தல் தொகுதியைத் தவிர மாவட்டத்தின் ஏனைய அனைத்துத் தொகுதிகளிலும் பெரும் வாக்கு எண்ணிக்கையில் கட்சி வெற்றிபெற்றுள்ளது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் செயற்பாடுகளுக்கு காலி மாவட்ட மக்கள் வழங்கிய அங்கீகாரமாக இந்த வெற்றியை குறிப்பிட முடியும்.
 
அமைச்சர் மஹீந்த அமரவீர :-
 
மேல் மாகாணம் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக எதிர்க் கட்சிகளிடமிருந்தோ அல்லது தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து கூட புகார்கள் வரவில்லை எனவும் அந்தளவு நீதியான தேர்தலை அரசாங்கம் நடத்தி முடித்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
 
லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன :-
 
இரு மாகாணங்களிலும் அரசாங்கத்துக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளதுடன் குறிப்பாக மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து இரண்டு மேலதிக ஆசனங்களையும் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. மொத்தமாக பத்து ஆசனங்கள் பெற்றுள்ளமை என்பது பெரு வெற்றியாகும். அத்துடன் எதிர்க் கட்சி ஒரு ஆசனத்தை இழந்துள்ளதையும் குறிப்பிட வேண்டும்.
 
அரசாங்கம் வெற்றிகரமாக தமது பயணத்தை முன்னோக்கித் தொடர இந்த மகத்தான வெற்றி உறுதுணை புரியும்.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் வங்குரோத்து நிலையையும் இந்த தேர்தல் முடிவுகளில் காணமுடிகிறது.

தனித்துப் போட்டியிட்ட சிறுபான்மை கட்சிகளின் வாக்குகளில் பெருமளவு சரிவு!
 
தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்ட சிறுபான்மைக் கட்சிகள் தாம் எதிர்பார்த்தளவு வாக்குகளைப் பெறவில்லையென அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன ஓரிரு ஆசனங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டன. மேல் மாகாணத்தில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எந்தவொரு ஆசனத்தையும் பெற்றிருக்கவில்லை.
 
மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி மேல் மாகாணத்தில் மொத்தமாக 51 ஆயிரம் வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 49,515 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 15,491 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது.
 
தென் மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டபோதும் 1419 வாக்கு களைப் பெற்றிருந்தது. எனினும் ஆசனங்கள் எதனையும் பெறமுடியவில்லை.
இந்தக் கட்சிகள் எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லையென அரசியல் அவதானிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment