Monday, March 3, 2014

72 கிலோ வெடிபொருட்கள் விநியோகம் தொடர்பில் மேலும் மேலும் ஒருவர் கைது!

Monday, March 03, 2014
இலங்கை::யாழ். பாஷையூர் பகுதியில் கடந்த பெப்ரவரி  18 ஆம் திகதி மீட்கப்பட்ட 72 கிலோ வெடிபொருட்கள் விநியோகம் தொடர்பில் மேலும் ஒருவரை பளைப் பகுதியில் வைத்து பளைப் பொலிஸார் கைதுசெய்ததாக யாழ்.பொலிஸ் நிலையப் பொலிஸார் திங்கட்கிழமை (03) தெரிவித்தனர்.

பளைப் பகுதியினைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பளைப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மேற்படி நபர் ஞாயிற்றுக்கிழமை (2) மாலை  தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை வெடிபொருட்களுடன் சம்பந்தப்பட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்.பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

யாழ்.பாஷையூர் பகுதியிலுள்ள வீடொன்றில் சி.டி.வெடிபொருட்கள் 16 கிலோவும், ரி.எம்.ரி வெடி மருந்துக்குச்சிகள் 56 கிலோவுமாக மொத்தம் 72 கிலோ வெடிபொருட்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (18) யாழ். பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பாஷையூரைச் சேர்ந்த நபர் கடந்த ஜனவரி 19ஆம் திகதி ஓமந்தைப் பகுதியில் வைத்து ஓமந்தைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின்படி ஜனவரி 20 திகதி பூநகரிப் பகுதியில் வைத்து இருவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் தேசிய பாதுகாப்புக்கு எதிராக செயற்பட்டமைக்காக பயங்கரவாத தடுப்புப்பிரிவினரின் அனுமதி பெற்று மேலும் 3 நாட்கள் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்காக தடுத்து வைக்கப்பட்டனர்.

இதனைத்தவிர மேலும் 3 மாதங்கள் இவர்களை தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு அனுமதி கோரி பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்று ஜனவரி 23 அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மறுநாள் 24 ஆம் திகதி யாழ்.நாவாந்துறையினைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் மூலமே வெடிபொருட்களை விநியோகம் செய்த குற்றச்சாட்டில் பளைப்பகுதியினைச் சேர்ந்த மேற்படி நபர் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment