Monday, March 17, 2014

வட மாகாண சபையின் 7ம் அமர்வு நாளை நடைபெறுகிறது- 15 பிரேரணைகள் உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்படவுள்ளது!

Monday, March 17, 2014
இலங்கை::வட மாகாண சபையின் 7ம் அமர்வு நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில், 15 பிரேரணைகள் உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இவற்றில் போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் மேம்பாட்டிற்கான தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல் தொடர்பான பிரேரணை ஒன்றும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலமையில், 18ம் தேதி நாளை மாகாண சபையின் 7ம் அமர்வு நடைபெறவுள்ளது. இந்த அமர்வில் மாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன், பசுபதிப்பிள்ளை, சுகிர்தன், குணசீலன், அன்டனி ஜெயநாதன், இந்திரராஜா, அஸ்வின், ஆகியோரால் மேற்படி 15 பிரேரணைகளும் முன்வைக்கப்படவுள்ளன.
 
இவற்றில் முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் இரு பிரேரணைகளை சமர்ப்பிக்கவுள்ளார். அவற்றில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம், தேவிபுரம் கிராமங்களில் வாழ்கின்ற போரினால் பாதிக்கப்பட்டு பெண் தலமைத்துவக் குடும்பங்களின் மேம்பாட்டிற்கான தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தேவிபுரம் கிராமத்தில் சுமார் 148 பெண் தலமைத்துவக் குடும்பங்கள் உள்ளன. இவற்றில் 114 குடும்பங்கள் கணவனை இழந்த பெண்களுடைய குடும்பங்கள். அதேபோன்றே வள்ளிபுனம் கிராமத்தில் 114 பெண் தலமைத்துவக் குடும்பங்கள் உள்ளன.
இவற்றில் 92 குடும்பங்கள் கணவனை இழந்த பெண்களுடைய குடும்பங்கள். மேற்படி 262 பெண் தலமைத்துவக் குடும்பங்களின் மேம்பாட்டிற்காக போருக்கு முன்னர் இப்பகுதியில் இயங்கிய தும்பு தொழிற்சாலையை மீளவும் உருவாக்க வேண்டும்.
அதன்மூலம் 50 முதல் 60 வரையான குடும்பங்களுக்கு மீளவும் தொழில்வாய்ப்பு வழங்க முடியும். எனினும், போருக்கு முன்னர் இயங்கிய தும்புத் தொழிற்சாலை நிலத்தில் படையினர் தற்போது நிலைகொண்டிருக்கும் நிலையில், மாற்றிடத்தில் தொழிற்சாலையினை அமைக்க மாகாண அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதேபோன்று வட்டுவாகல் நந்திக்கடல் பகுதி, நீண்டகாலம் தூர்வாரப்படாமல் உள்ள நிலையில், புதுமாத்தளன் முதல் சிலாவத்தை வரையிலான சுமார் 2 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் கோடைக்காலத்தில் தொழில்வாய்ப்பின்றி உள்ளனர்.
எனவே, அவர்களுடைய வாழ்வாதர மேம்பாட்டிற்காக மேற்படி நந்திக்கடல் பகுதியை 3 முதல் 4 அடி ஆழமாக்க வேண்டும் என்ற பிரேரணையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக பொது முக்கியத்துவத்தின் அடிப்படையில், ஒத்திவைப்பு பிரேணைகளும் நாளைய அமர்வில் சமர்ப்பிக்கப்படும்.

No comments:

Post a Comment