Wednesday, March 12, 2014

வீடுகளில் பீரோ உடைத்து சோதனை இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் சிறைபிடிப்பு இலங்கை தமிழர் முகாமில் பரபரப்பு!

Wednesday, March 12, 2014
ராஜபாளையம்::விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மொட்டமலையில் இலங்கை தமிழர் முகாம் உள்ளது. இங்கு 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. முகாமுக்கு அருகே கலங்காப்பேரியில் உள்ள தனியார் பள்ளியில் பெயின்டிங் பணி நடந்து வருகிறது. முகாமைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (32), பென்னிட்சன் (20) ஆகியோர் கடந்த 15 நாளாக வேலை பார்த்து வருகின்றனர்.சில நாட்களுக்கு முன் பள்ளியில் ரூ.25 ஆயிரம் திருடு போனது. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் ராஜபாளையம் தெற்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
 
நேற்று மப்டி உடையில் இன்ஸ்பெக்டர் ராமநாதன், எஸ்ஐ ராமநாராயணன் மற்றும் 4 போலீசார் பள்ளிக்கு சென்றனர். அங்கு பெயிண்டிங் பணியில் இருந்த ஜெயச்சந்திரன், பென்னிட்சன் ஆகியோரிடம் விசாரித்தனர். அவர்கள் பணத்தை எடுக்கவில்லை என தொடர்ந்து கூறினர். உடனே அவர்களை பள்ளியின் ஓர் அறையில் எஸ்ஐ பாதுகாப்பில் உட்கார வைத்து விட்டு, ராமநாதன் மற்றும் 4 போலீசார், அகதிகள் முகாமுக்கு சென்றனர். அங்கு ஜெயச்சந்திரன், பென்னிட்சன் வீட்டில் சோதனையிட்டனர். பீரோ சாவியை அவர்களின் பெற்றோர் தராததால் பீரோவை உடைத்தும் சோதனையிட்டனர். ஆனால், பணம் சிக்கவில்லை. இதற்கிடையில், முகாமை சேர்ந்த 300 பேர் இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசாரையும் சிறைபிடித்தனர்.
 
மப்டி உடையில் சென்றிருந்ததால், நீங்கள் போலீஸ் தானா எனக் கேட்டு சுற்றி வளைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராஜாபாளையம் டிஎஸ்பி அசோகன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் பீரோவை உடைத்து சோதனையிட்டதற்கு வருத்தம் தெரிவித்ததின் பேரில், சிறைபிடித்த போலீசாரை விடுவிக்க சம்மதித்தனர். அதன்பிறகு இரவு 11 மணிக்கு 5 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment