Tuesday, March 04, 2014
மணமேல்குடி::புதுக்கோட்டையில் நேற்று நள்ளிரவு நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த 32 மீனவர்களையும், அவர்களது 8 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது.
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்திலிருந்து 243 விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைபடகு மீனவர்களும், கோட்டைப்பட்டினத்திலிருந்து 206 விசைபடகுகளில் 850 மீனவர்களும் நேற்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் இன்று காலை கரை திரும்பவேண்டும். நேற்றிரவு நடுக்கடலில், கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 8 விசைபடகுகளை சுற்றிவளைத்தனர். அச்சமடைந்த மற்ற மீனவர்கள் வேகமாக இன்று காலை கரை திரும்பினர்.
இதில் ஜெகதாபட்டினத்திலிருந்து அஞ்சப்பன் என்பவரது படகில் சென்ற வீரகுமார்(23), வீரதாஸ்(26), சுப்பையன்(50), விவேக்(19), செல்லாட்சி படகில் சென்ற சிவபெருமாள்(55), முருகன்(55), மாரியப்பன்(35), பாபு(28), வைரகண்ணு படகில் சென்ற கணேசன்(45), சின்னையன்(50), சம்சுதீன்(55), கண்ணப்பன்(60), பெருமாள் படகில் சென்ற முகிலன்(18), பிரசாத்(25), விக்னேஷ்(23), ஜெயபால்(50), சன்னியாசி(40), கமலநாதன் படகில் சென்ற பாபு(40), இடும்பன்(60), பாண்டி(30), சக்தி(23), வளர்செல்வன் படகில் சென்ற பழனியாண்டி(55), கமலநாதன்
(30), பார்த்திபன்(23), பிரபாகரன்(19), செல்வநாதன் படகில் சென்ற தமிழ்செல்வன்(29), பஞ்சவர்ணம்(60), பிரகாஷ்(26), செந்தில்(32), ராஜா படகில் சென்ற சதீஷ்(19), ஆறுமுகம்(40), ஸ்ரீராம்(19) ஆகிய 32 மீனவர்களையும், அவர்களது 8 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இன்று காலை 32 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துசென்று ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் சிறையில் அடைத்தனர். இது மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண தமிழக-இலங்கை மீனவர்களிடையே கடந்த ஜனவரி 27ம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது. அதில் 2ம் கட்ட பேச்சுவார்த்தை இலங்கையில் நடத்தி தமிழக மீனவர் பிரச்னைக்கு சுமுக முடிவு எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தைக்கு முன், திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் இலங்கையில் சிறைவைக்கப்பட்ட 295 தமிழக மீனவர்கள், 22 புதுச்சேரி மீனவர்கள் இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தமிழக இலங்கை மீனவர்களிடையே 2ம் கட்ட பேச்சுவார்த்தையை இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் வரும் 13ம் தேதி நடத்தலாம் என தமிழக அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. பேச்சுவார்த்தைக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசின் வெளியுறவுத்துறை இணை செயலாளரை கடந்த 2ம் தேதி கடிதம் மூலம் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் புதுக் கோட்டை, நாகை மீனவர்கள் 32 பேர், அவர்களது 8 படகுகள் சிறைபிடிக்கப்பட்டது மீனவர்களிடையே சோகத்தையும், பரபரப்பையும் ஏறபடுத்தியுள்ளது.

No comments:
Post a Comment