Monday, March 10, 2014
சென்னை::பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
சென்னை::பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
கடந்த 3ம் தேதியன்று 8 இயந்திரப் படகுகளில் பாக்ஜலசந்தி கடற்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த 32 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்ததற்கு கண்டனம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி தங்களுக்கு கடிதம் எழுதினேன். அதன்பின் 2 நாட்களிலேயே, கடந்த 5ம் தேதியன்று ராமேஸ்வரத்தை சேர்ந்த 24 மீனவர்கள் 2 இயந்திரப் படகுகளில் பாக்ஜலசந்தி கடற்பகுதியில் மீண்டும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, மன்னார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அச்சுறுத்தி, கைது செய்து, இலங்கை சிறையில் அடைத்து வருகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. வரும் 13ம் தேதியன்று இலங்கையில் நடைபெறும் இருதரப்பு மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் விதமாகவே இலங்கை கடற்படையினரின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன.
தாங்கள் இவ்விஷயத்தில் உடனடியாக இலங்கை அரசுடன் உயர்மட்ட அளவில் தூதரக பேச்சுவார்த்தை நடத்தி,கடந்த 5ம் தேதி இலங்கை கடற்படையினரால் 5 மீன்பிடி படகுகளுடன் சிறை பிடிக்கப்பட்ட 24 தமிழக மீனவர்கள், ஏற்கெனவே 44 மீன்பிடி படகுகளுடன் பிடிபட்ட 177 தமிழக மீனவர்களை எவ்வித வழக்குகளும் இன்றி, வரும் 13ம் தேதி இலங்கையில் நடைபெற இருக்கும் இருதரப்பு மீனவர்களின் பேச்சுவார்த்தைக்கு முன் இலங்கை அரசு விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஜெயலலிதா கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

No comments:
Post a Comment