Tuesday, March 11, 2014

கூட்டணியில் தொடர்ந்து குழப்பம் தேமுதிக 14 தொகுதி பட்டியல் திருப்பி அனுப்பியது பாஜ!!

Tuesday, March 11, 2014
சென்னை::தேமுதிக அளித்த 14 தொகுதிக்கான பெயர் பட்டியலை, பாஜ திருப்பி அனுப்பியது. தேமுதிக கேட்கும் சில தொகுதிகளை பாஜ, பாமக போட்டியிட விரும்புவதால் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. தமிழகத்தில் பாஜ அணியில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஐஜேகே, புதிய நீதி கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. பாஜ கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு என்று தேமுதிக 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
 
இந்நிலையில் தேமுதிக நிர்வாகிகள் நேற்று பாஜ அலுவலகத்துக்கு வந்து, தாங்கள் போட்டியிட விரும்பும் 14 தொகுதிக்கான பெயர் பட்டியலை அளித்தனர். அந்த பட்டியலை வாங்கி பார்த்த பாஜவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தேமுதிக கேட்கும் பட்டியலில் சில தொகுதிகளில் பாஜவும், பாமகவும் போட்டியிட விரும்புகின்றன. இதனால் தேமுதிக அளித்த பட்டியலை மாற்றி வருமாறு பாஜவினர் திருப்பி அனுப்பி விட்டனர். இன்று மாலைக்குள் அவர்கள் பட்டியலை மாற்றி பாஜவினரிடம் கொடுப்பார்கள் என்று தெரிகிறது. அந்த பட்டியலை பாஜ ஏற்று கொண்டால் நாளை அல்லது நாளை மறுநாள் தேமுதிக போட்டியிடும் 14 தொகுதிக்கான பெயர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
 
தொகுதிக்கான பட்டியல் வெளியானவுடன், போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை உடனடியாக தேமுதிக வெளியிடும் என்று கூறப்படுகிறது. அதனால்தான் தனது முதல் கட்ட பிரசாரத்தை 14ம் தேதி முதல் தொடங்க போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும், பாஜ கூட்டணியில் சேர பாமக முதலில் 14 தொகுதிகளை கேட்டது. இதை பாஜ ஏற்கவில்லை. அதன்பின், 12 தொகுதிகளுக்கு பாமக இறங்கி வந்தது. அதையும் பா.ஜ. ஏற்கவில்லை. கடைசியாக, பாமக சார்பில் வேட்பாளர்கள் அறிவித்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள சேலம், கிருஷ்ணகிரி, அரக்கோணம், ஆரணி, சிதம்பரம், கடலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, விழுப்புரம், புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளையாவது தரவேண்டும் என்று பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 8 தொகுதிகள் வழங்க பாஜ முன்வந்தது.
 
மேலும், பாமக கேட்கும் 10 தொகுதிகளில் 6 தொகுதிகளில் போட்டியிட பாஜ திட்டமிட்டுள்ளது. மற்ற 2 தொகுதிகளை தேமுதிக கேட்கிறது. இதனால், பாமக கேட்கும் தொகுதிகளை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் கேட்கும் தொகுதிகளை வழங்காவிட்டால் கூட்டணிக்கு வர மாட்டோம் என்று பாமக தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறது. அப்படி கேட்ட சீட்டை வழங்காத பட்சத்தில் ஏற்கனவே அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள 10 தொகுதிகளுடன், கூடுதலாக சில தொகுதிகளை சேர்த்து தனித்து போட்டியிடலாமா என்றும் பாமக ஆலோசனை நடத்தி வருகிறது. ஒரு வேளை பாஜ கூட்டணியில் இருந்து பாமக விலகினால் தேமுதிகவுக்கு கூடுதலாக சீட் கிடைக்கும் என்று தெரிகிறது.
 
தற்போதைய நிலையில் பாஜ அணியில் தேமுதிக 14, பாமக 8, பாஜ 8, மதிமுக 7, என்ஆர் காங்கிரஸ் 1, ஐஜேகே 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1 சீட் வழங்க பாஜ முடிவு செய்துள்ளது. இந்நிலையில், தங்களது முடிவை 13ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று பாமகவுக்கு பாஜ கெடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment