Thursday, February 27, 2014

மஹா சிவராத்திரி தின பிரார்த்தனைகள் சமூக ஐக்கியத்துக்கான அர்ப்பணமாக திகழும்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Thursday, February 27, 2014
இலங்கை::முழுமுதற் கடவுளான சிவபெருமானை பூஜித்து கொண்டாடப்படும் பிரதான விரதங்களில் மிகவும் சிறப்பான விரதமாக கருதி மகா சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்துக் கொண்டிருக்கும் இலங்கை வாழ் இந்துக்களுக்கு வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று மகா சிவராத்திரி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இப்புனித தினத்தில் ஜனாதிபதி அவர்கள் இலங்கை வாழ் சகல இந்து மக்களுக்கும் வாழ்த்துச் செய்துயொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய தினம் மகா சிவராத்திரி இலங்கை வாழ் இந்துக்கள் உலகெங்கிலுமுள்ள இந்துக்களுடன் இணைந்து கொள்கின்றனர். இப்பண்டிகையுடன் தொடர்புடைய பல்வேறு கிரியைகளில் விரதம் அனுஷ்டித்தல், கோவிலில் இரவில் விழித்திருந்து நான்கு ஜாமப்பூஜைகளில் கலந்து கொண்டு , தானம் வழங்குதல், விளக்கேற்றல், சிவபெருமானைப் புகழ்த்து தோத்திரம் பாடுதல் போன்றவையும் அடங்குகின்றன.
இப்பண்டிகையின் முக்கிய அம்சமான திருவிளக்கேற்றும் வைபவம் அறியாமையை அகற்றி ஞானத்தைத் தேடும் மானிட சமூகத்தின் உறுதியான முயற்சிகளையும் தமது வாழ்விலும் சமூகத்திலும் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் அடைந்து கொள்வதையும் குறித்து நிற்கிறது.
இலங்கைவாழ் இந்துக்கள் எமது சமூகத்தில் உள்ள ஏனைய சமயங்களைச் சேர்ந்தவர்களுடன் பல நூற்றாண்டுகளாக சகோதரத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த முக்கியமான பண்டிகையை உண்மையான ஐக்கிய உணர்வுடனும் புரிந்துணர்வுடனும் சுதந்திரமாகக் கொண்டாடுவதற்கேற்ற சமாதானச் சூழல் தற்போது நாடெங்கிலும் காணப்படுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

No comments:

Post a Comment