Friday, February 07, 2014
இலங்கை::ஒரு நாடு அபிவிருத்தித் துறையிலும், வெளிநாட்டு முதலீட்டுத் துறையிலும் சிறந்து விளங்க வேண்டுமானால் அந் நாட்டில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை கவரத்தக்க உகந்த சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திறங்கும் வெளிநாட்டு செல்வந்தர்கள் அல்லது உல்லாசப்பயணிகள் விமான நிலையத்தில் இருந்து வெளியேறி அதிவேக நெடுஞ்சாலை மூலம் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை சென்றடைகின்றார்கள்.
நாட்டுக்குள் வந்தவுடன் நாட்டின் அபிவிருத்தியை பார்த்து வெளி நாட்டவர்கள் மலைத்துப்போகும் அளவுக்கு இலங்கைத் தலைநகரை அழகாகவும் பொலிவுடனும் வைத்திருக்க வேண்டும். அதன் மூலமே வெளிநாட்டவர்களை இலங்கைக்குள் அதிகமாக ஈர்த்தெடுக்க முடியும். இந்த குறிக்கோளுடனேயே இலங்கை அரசாங்கம் நெடுஞ்சாலைகளையும், துறைமுகங்களையும், விமான நிலையங்களையும் அபிவிருத்தி செய்கின்றது.
யுத்தத்தின் பின்னர் நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை துரித கதியில் அரசாங்கம் அபிவிருத்தி செய்த காரணத்தினால் தான் யுத்தம் முடிவடைந்தவுடன் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன, யுத்தக் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றன என்றெல்லாம் பலத்த அழுத்தங்களை சர்வதேச சமூகம் இலங்கை மீது கொண்டு வந்த போதிலும் ஓரிரு வருடங்களில் அரசாங்கம் அபிவிருத்தி துறையில் மேற்கொண்ட பணியைப் பார்த்து வியந்து போன சர்வதேச சமூகம் இலங்கை மீதான இத்தகைய அழுத்தங்களை பெருமளவில் தளர்த்திக் கொண்டுள்ளது.
யுத்தத்தில் இடம்பெற்ற இழப்புகளை ஈடு செய்வதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகளை அவதானித்திருக்கும் சர்வதேச சமூகம் யுத்தத்தினால் குடிபெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் நற்பணிகளையும் இப்போது பாராட்ட ஆரம்பித்துள்ளது.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரேரணைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் சில மேற்குலக நாடுகள் புலிப் பயங்கரவாதிகள் இழைத்த மனித உரிமை மீறல்களைப் பற்றி இதுவரை மெளனம் சாதித்து விட்டு இன்று அரசாங்கத்தின் மீது அத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்துவது வேடிக்கையாக உள்ளது. இதுவரையில் புலிப். பயங்கரவாதிகள் இழைத்த மனித உரிமை மீறல் பற்றி மனித உரிமையின் பாதுகாவலர்களாக பாசாங்கு செய்யும் சில மேற்குலக நாடுகள் ஒரு சந்தர்ப்பத்திலாவது தீவிரவாதிகளை குற்றம்சாட்ட தவறியுள்ளன.
அரசாங்கம் தீவிரவாதிகளை. முற்றாக அழித்து வடபகுதி மக்களை இப்பயங்கரவாதிகளின் கொடுமையில் இருந்து விடுவிக்காமல் இருந்தால் இன்றும் அந்த மக்கள் துன்பத்தில் துவண்டு கொண்டிருப்பார்கள் என்பது உறுதி. இன்று வடபகுதி மக்கள் சகல வசதிகளையும் பெற்று சுகபோக வாழ்க்கையை நடத்துவதற்கு அரசாங்கம் மிகக்குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அன்று குப்பி விளக்கில் கல்வி கற்றுக் கொண்டிருந்த வடபகுதியில் உள்ள அப்பாவி மாணவ, மாணவியருக்கு வசதியான வீடுகளும், மின்சார விநியோகமும், நல்ல பாடசாலைகளும், ஆரோக்கிய வாழ்வுக்கு உறுதுணை புரியும் நவீன வைத்தியசாலைகளையும் சிறந்த போக்குவரத்து வசதிகளையும் இலங்கை அரசாங்கம் அமைத்துக் கொடுத்திருக்கிறமை சிறப்பம்சமாகும்.
இலங்கை மீது சுமத்தப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள் ஆகியன இன்று வலுவிழந்து வருகின்றன. எதிர் வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் மனித உரிமை பேரவையில் இலங்கை மேற்கொள்ளும் அபிவிருத்திப் பணிகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்வாழ்வளிக்கும் திட்டத்தையும் அரசாங்கம் ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டவுள்ளது. இதனால், அடுத்த மார்ச் மாதத்தில் இலங்கைக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழ் குழுக்களின் தூண்டுதலின் பேரில் கொண்டுவரப்படும் அழுத்தங்கள் செயல் இழந்துவிடும் என்று சர்வதேச அரசியல் அவதானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.



No comments:
Post a Comment