Thursday, January 09, 2014
இலங்கை::யாழ்ப்பாணத்தில் சேவையாற்றியது மகிழ்ச்சியளிக்கின்ற அதேவேளையில், இங்கிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்வது மிகுந்த கவலையளிப்பதாகவே இருப்பதாக யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைகளின் தளபதியாக இருந்து கொழும்புக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ள மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துறுசிங்க தெரிவித்துள்ளார்.
இங்கு பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு கடந்த நான்கு வருடத்தில் பல்வேறு உதவிகளைச் செய்து கொடுத்துள்ளதாகவும், மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் மிகவும் நெருக்கமான உறவைக்
கட்டியெழுப்பியுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
யாழ். ஏ9 வீதியின் மிருசுவில் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இராணுவத்தின் 52வது பாதுகாப்புப் படைத் தலைமையகத் திறப்பு விழா நேற்றுக் காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஊடகங்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு கவலை வெளியிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்த 2009ம் ஆண்டின் இக்கட்டான சூழ்நிலையில், யாழ். மாவட்டத்தின் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்று கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக இங்கு சிறந்த முறையில் செயற்பட்டு வந்திருக்கின்றேன்.
இந்த காலத்தில் பல்வேறு தேவைகளுடனும், எதிர்பார்ப்புக்களுடனும் இங்குள்ள மக்கள் இருந்தனர். இதற்கமைய மக்களுடன் மக்களாக இருந்து பல்வேறு உதவிகளை மக்களுக்கு வழங்கியிருக்கின்றோம். அதாவது, மாணவர்களின் கல்வி முதல் மக்களுடைய வீட்டுத் திட்டங்கள் என பல உதவிகளைக் குறிப்பிடலாம்.
அத்தோடு பொதுமக்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையேயான உறவினையும் வலுப்படுத்தியிருக்கின்றதுடன், தற்போதும் மக்களுடன் நெருங்கிப் பழகி வருகின்றோம். இதனூடாக இரண்டு தரப்பினர்களுக்குமிடையில் நெருக்கமான உறவுகள் அதிகரித்திருக்கின்ற அதேவேளையில், இரண்டு தரப்பினர்களும் ஒருவரையொருவர் புரிந்து கொள்கின்ற நிலை ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த நான்கு வருடங்களாக யாழில் கடமையாற்றியது மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்துகின்றது. ஆயினும், தற்போது இடமாற்றம் பெற்றுச் செல்வது மிகுந்த கவலலையை ஏற்படுத்துகின்றது எனவும் ஹத்துறுசிங்க மேலும் தெரிவித்தார்.
3828.jpg)
No comments:
Post a Comment