சென்னை::இலங்கைத் தமிழர்
பிரச்சினைபற்றி இந்திய அளவில் வேறு எந்தப் பத்திரிகையைவிடவும் அதிகமாக
எழுதியிருப்பது ‘தி இந்து’தான். அதிலும் 1983 இனப்படு கொலைக்குப் பின்,
தமிழ் ஆயுதக் குழுக்களின் செயல்பாடுகளையும் தமிழர் போராட்டங்களையும்பற்றி
விரிவான செய்திகளையும் கட்டுரைகளையும் ‘தி இந்து’ வெளியிட்டிருக்கிறதது.
நானும் டி.எஸ்.
சுப்பிரமணியனும் சேர்ந்து எடுத்த பிரபாகரனின் விரிவான பேட்டி இந்திய
அளவில் பேசப்பட்ட ஒன்று. ஜெயவர்த்தனே அதிபராக இருந்தபோது ‘தி இந்து’
செய்தியாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ்
கைதுசெய்யப்பட்டார். நான் கொழும்பு சென்று ஜெயவர்த்தனேவுடன் பேசினேன்;
சர்வதேச பத்திரிகையாளர் சந்திப்பில் குரல் எழுப்பினோம்; அவர்
விடுவிக்கப்பட்டார். இவை எல்லாம் வரலாறு.
புலிகளை
ஆரம்பத்தில் நாங்கள் பரிவோடு தான் அணுகினோம்; அவர்களுடைய நியாயங்களை
எழுதினோம். ஆனால், ரொம்ப சீக்கிரமே அவர்கள் மிகக் குரூரமாகத் தங்கள்
முகத்தை வெளிப்படுத்தினார்கள். ஏனைய ஆயுதக் குழுக்கள், போராட்டத்
தலைவர்கள் எல்லோரையும் அழித்தொழித்தார்கள். பின், வெவ்வேறு காலகட்ட
உரையாடல்களின்போது பிரபாகரனின் அரசியல் அறியாமையும் அவருடைய நோக்கங்களும்
புரிந்து விட்டன. உண்மையில், பிரபாகரன் ஒரு போல்பாட்டிஸ்ட்.
துப்பாக்கிகள் மீது அவருக்கு
இருந்த நம்பிக்கையில் துளியும் பேச்சுவார்த்தைகளிலோ ஜனநாயகத்திலோ இல்லை.
ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போதே இது
எனக்குத் தெளிவாகிவிட்டது. தொடர்ந்து அவர்கள் நடத்திய அரசியல் படுகொலைகள்,
செய்த அட்டூழியங்கள், பேச்சுவார்த்தைகளில் அவர் வீணடித்த பொன்னான
வாய்ப்புகள், எல்லாவற்றுக்கும் மேல் முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை…
புலிகளை எதிர்த்து எழுத இவை எல்லாம்தான் காரணங்கள். புலிகள் எதிர்ப்பு
என்பது எப்படி இலங்கைத் தமிழர்கள் அல்லது தமிழ் விரோதப் போக்காகும்?
இலங்கைப் பிரச்சினை மட்டும்
அல்ல; காவிரி, முல்லைப் பெரியாறு என எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நாம்
பெரிய அளவிலான கவனம் கொடுக்கவே செய்திருக்கிறோம். ஆனால், எது உண்மையில்
சாத்தியமோ, எது உண்மை நிலையைப் பிரதிபலிக்கிறதோ அதையே எழுதுகிறோம்.
போலித்தனமோ, இரட்டை வேடமோ போடுவது இல்லை.
புலிகள் எதிர்ப்புதான் தமிழீழ எதிர்ப்பாகவும் உருவெடுத்ததா?
இல்லை. தொடக்கம் முதலே ‘தி
இந்து’ தனித் தமிழீழம் என்ற கருத்தாக்கத்தை எதிர்த்தே வந்திருக்கிறது.
இந்தியாவின் அயலுறவுக் கொள்கையும் அதுதான். அரசியல் சாத்தியமே இல்லாதது
தமிழீழம்; அது அமைந்தால் நல்லதும் அல்ல.
தமிழீழம் சாத்தியம் இல்லை; நல்லது இல்லை என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?
அடிப்படையிலேயே இனவாதக்
கோரிக்கை அது. இங்கிருந்து நாம் இலங்கைத் தமிழர்கள் என்ற சொல் வழியே
பார்க்கும் மக்கள் வேறு; அங்குள்ள மக்கள் வேறு. மலையகத் தமிழர்கள்
தனித்திருக்கிறார்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் தனித்திருக்கிறார்கள்;
அவர்களுடைய பிரச்சினைகள் இங்கு பேசப்படுவது இல்லை. ஈழத்தின் பரப்பாகக்
கேட்கப்பட்ட வட - கிழக்கு மாகாணங்களை எடுத்துக்கொண்டால், கிழக்கு
மாகாணத்தில் மூன்றில் இரு பங்கினர் தமிழர் அல்லாதவர்கள்; வட பகுதியோடு
இணைவதில் விருப்பம் இல்லாதவர்கள்; அவர்களுடைய நியாயங்களை விவாதிக்க இங்கு
அனுமதிக்கப்படுவதுகூட இல்லை.
அப்புறம், அரசியல்ரீதியாக,
பொருளாதாரரீதியாக, புவியரசியல்ரீதியாக நீடிக்க வாய்ப்பே இல்லாதது அது.
முக்கியமாக, வியூக முக்கியத்துவம். அந்தப் பகுதியை ராணுவரீதியாக யாரும்
விட்டுவைக்க மாட்டார்கள் - ஒருபோதும் அது நீடிக்க முடியாதது. கடைசியில்
அதுதான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், ஒன்றுபட்ட இலங்கை என்ற
அமைப்பின் கீழ், சுயாட்சிக்கு இணையான உச்சபட்ச அதிகாரப் பகிர்வுதான்
இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியையும் நன்மைகளையும் தருமேயன்றி பிரிவினை
அல்ல.
உங்கள் நண்பர் ராஜபக்ஷ
முன்னெடுத்த இறுதிப்போரில் மக்கள் கொல்லப்பட்டதும்
போர்க் குற்றங்கள் நடந்தது என்ன
சொல்கிறீர்கள்?
போர்களை ஆதரிப்பவன் அல்ல
நான். முன்னரே சொன்னேன் – பிரிவினையும் துப்பாக்கிகளும்தான் தீர்வு என்ற
முடிவில் பிரபாகரன் தீர்மானமாக இருப்பதை உணர்ந்த பின்தான்
புலிகளைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தேன் என்று. இறுதிப் போரின் போது
நடந்த மனித உரிமை மீறல்கள் மிகப் பெரிய துயரம். போர்க் குற்றங்கள் இரு
தரப்பினராலுமே நடத்தப்பட்டிருக்கின்றன. நிச்சயம் குற்றவாளிகள்
தண்டிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக இலங்கை அரசே நடவடிக்கை எடுக்க
ராஜபக்ஷ தயக்கமின்றிச் செயல்பட வேண்டும். அதேசமயம், இந்த விவகாரம்
மட்டும் பிரதானம் இல்லை; மீள்கட்டமைப்பும் உச்சபட்ச அதிகாரப் பகிர்வும்
வேண்டும். அவைதான் தமிழர்களின் எதிர்கால நலனை நிர்ணயிக்கும்

No comments:
Post a Comment